சிறுகதை

மூடநம்பிக்கை – ராஜா செல்லமுத்து

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன். கைதிகளைக் கூப்பிட்டு வருவதும் குற்றம் செய்தவர்களை விசாரிப்பதும் காவல் நிலையத்தில் இருந்து ஆட்கள் வெளியில் வருவதும் போவதுமாய் அந்தக் காவல் நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. வயர்லெஸில் அடிக்கடி செய்திகள் வந்து கொண்டே இருந்தன.

ஒரு வயதானவரை காபி வாங்க அனுப்பி வைத்தார் ஒரு போலீஸ்காரர். ஒரு பேப்பர் ஒரு பண்டல் பேப்பர், பேனா ரெண்டு வாங்கிட்டு வா என்று ஒரு போலீஸ் ஒரு பெண்மணியிடம் சொல்ல ‘இவ்ளோ பேப்பர் எதுக்கு சார்?’ என்று கேட்டாள்.

‘அதெல்லாம் நீ கேட்காத. சொன்னதை செய்’ என்று அந்த போலீஸ்காரர் அந்தப் பெண்மணியை விரட்டினார்.

‘ஆடு காணா பாேச்சுன்னு கேஸ் கொடுக்க வந்தா ஒரு பண்டல் பேப்பர் எதுக்கு வாங்கிட்டு வரச் சொல்றாங்கன்னு தெரியல. கேஸ் எழுதுறதுக்கு ஒரு பேப்பர் போதுமில்ல ஒரு பண்டல், பேனா எதுக்கு?’ என்று முணுமுணுத்தபடி அந்தப் பெண்மணி வெளியே சென்றார் .

பைக் திருடியவனை அதே இடத்தில் வைத்து அடித்துக் கொண்டிருந்தார் ஒரு காவலர்.

இப்படி பல விதமான பிரச்சனைகள் அந்தக் காவல் நிலையத்தில் நடந்து கொண்டிருந்தது.

அந்த நேரம் பார்த்து வடிவேல் போலீஸ் ஸ்டேஷனுக்குள் ஓடிவந்தான். அவன் ஓடி வருவதைப் பார்த்த போலீஸ்காரர்கள் திகைத்து நின்றார்கள் .

ஏன் இவன் இப்படி ஓடி வருகிறான் ? என்று ஒருவருக்கும் புரியாமல் விழித்தார்கள்.

மூச்சிரைக்க வந்தவன் மூச்சு விட்டபடியே, ‘சார் என்ன ஜெயில்ல போடுங்க’ என்றான். அதைக் கேட்ட போலீஸ்காரர், ‘நீ என்ன தப்பு செஞ்ச? உன்னை ஜெயில்ல போட? நீ செஞ்ச தப்ப சொல்லு’ என்று கேட்டபோது, ‘நான் தப்பு ஏதும் செய்யலை சார். ஒரு நாள் என்ன ஜெயில்ல வையுங்க’ என்றான்.

‘டேய் தப்பு செய்யாம எல்லாம் முடியாது. வெளியே போடா’ என்று துரத்தினார் இன்ஸ்பெக்டர்.

‘ஒரு நாள் மட்டும் ஜெயில்ல வைங்க சார். அது போதும்’ என்று மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருந்தான் அந்த மூடன்.

‘நீ தப்பு செஞ்சா தான் ஜெயில்ல போடுவாங்க. தப்பு செய்யாதவர்கள் ஜெயில்ல போட மாட்டாங்க. போடா வெளியே’ என்று சொல்லிப் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.

அவன் போவதாகத் தெரியவில்லை. ‘உனக்கு என்ன பிரச்சனை? ஏன் இப்படி வந்து எங்க உயிர் எடுத்துட்டு இருக்க? தப்பு செய்றவுங்களுக்குத் தான் தண்டனை. திருடனியா, கொள்ளை அடித்தியா? கொலை பண்ணியா? பூட்டை உடைத்து பீரோவில் இருந்த எதையும் எடுத்தியா? என்னடா பண்ணுன? உன்ன வந்து நான் ஜெயிலில் போட’ என்ற இன்ஸ்பெக்டர் விசாரித்தபோது,

‘சார் அதெல்லாம் இல்ல சார். எனக்கு ஜோசியம் பார்த்த ஒரு சோதிடர் நீ ஒரு நாள் ஜெயிலில் இருந்தா நீ ஓகோன்னு வந்துருவே. நீ நினைத்த காரியம் நிறைவேறும். நீ தொட்டதெல்லாம் துலங்கும். ஜெயிலுக்குப் போயிட்டு வந்த அடுத்த நாளே நீ கோடீஸ்வரன் ஆயிடுவேன்னு சொன்னார் சார். அது என் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு. தயவு செஞ்சு என்னை ஜெயில்ல போடுங்க சார்’ என்று அந்த மூடன் சொன்னபோது அங்கிருந்த போலீசுக்கு கடுங்கோபம் வந்தது.

‘யார்ரா அந்த ஜோசியக்காரன்?’ என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

‘எனக்கு தெரிஞ்ச ஜோசியர் சின்ன வயசிலிருந்து அவர்தான் ஜோசியம் பாக்குறாரு. அவரு சொன்ன எல்லாமே நடக்கும். தயவு செஞ்சு என்னை ஜெயில்ல போடுங்க சார்’ என்று மன்றாடிக் கேட்டான் அந்த மடயன்.

சொல்லி சொல்லி பார்த்தார் இன்ஸ்பெக்டர், ‘இவனை நாலு போடு போட்டு அனுப்புங்க’ என்று இன்ஸ்பெக்டர் போலீசிடம் சொன்னபோது, வடிவேலைப் பதம்பார்த்து அனுப்பினார்கள் போலீஸ்காரர்கள்.

‘ஐயோ ஐயோ’ என்று கத்திக் கொண்டே வெளியே ஓடி வந்தான் வடிவேல். வாங்கிய அடி அந்த மூடநம்பிக்கைக்காரனுக்கும் கேட்டிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *