ராஞ்சி, செப். 12–
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஷிபு சோரன் உடல்நலக்குறைவு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஷிபு சோரன், முதலமைச்சர் ஹேமந்த் சோரனுடன் ராஞ்சிக்குத் திரும்பியபோது, டெல்லி விமான நிலையத்தில் தனது மூச்சு விடுவதில் உள்ள சிரமத்தை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, உடல்நலக்குறைவு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நிலை சீராக உள்ளது
இதனைத் தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஷிபு சோரனின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘குருஜி’ என்று அன்புடன் அழைக்கப்படும் ஷிபு சோரன், 2005 முதல் 2010 வரை மூன்று முறை ஜார்கண்ட் முதலமைச்சராகப் பணியாற்றினார். 8 முறை மக்களவை உறுப்பினராக இருந்த அவர், இப்போது ராஜ்யசபா எம்.பி. யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
9 ந்தேதி டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில், ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கிய விருந்தில் கலந்து கொள்ள சென்ற முதலமைச்சர் ஹேமந்த் சோரனுடன் சென்ற ஷிபு சோரன், வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.