சிறுகதை

மூங்கில் வாரிசு – ராஜா செல்லமுத்து

வெங்கடேசன் ஒரு வித்தியாசமானவன் எது செய்தாலும் மற்றவர்களிடமிருந்து விலகித்தான் செய்ய வேண்டும் என்ற விதிவிலக்கானவன்.

அதனால் அவன் எந்த ஒரு வேலை செய்தாலும் மற்றவர்களிடமிருந்து அது தனித்தன்மையோடு தான் இருக்கும்.

அதனால் வெங்கடேசன் ஒரு வேலை செய்கிறான் என்றால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் மற்றவர்களிடம் அது புதிதாக இருக்கும் என்று பேசிக்கொள்வார்கள் .

இந்த நற்பெயருக்குள் வெங்கடேசன் வந்ததால் அவன் செய்வதெல்லாம் வித்தியாசமாகவே இருந்தது.

தன்னுடைய நிறுவனத்தில் முதலாளி மகனுக்கு திருமணம் ஏற்பாடு நடந்தது.

எல்லோரும் பணம், பரிசுப் பொருட்கள் என்று எதை எதையோ வாங்கி கொடுத்தார்கள். ஆனால் வெங்கடேசன் மட்டும் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தான்.

பரிசு பொருட்கள் விற்கும் கடைக்கு சென்றான்.

கடைக்காரர் என்னென்னவோ பரிசு பொருட்களை காண்பித்தார். ஆனால் அதுவெல்லாம் அவன் மனதில் ஒட்டவில்லை.

அந்தக் கடையில் சின்னப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறு சிறு மூங்கில் செடிகளை நட்டு வைத்திருந்தார்கள். அந்தக் கடைக்காரரை குறுகுறு என்று பார்த்த வெங்கடேசன் இந்த மூங்கில் செடி வேணும் என்று கேட்டான்.

அதெல்லாம் முடியாது .இதை விற்கமுடியாது என்றான்.

இல்ல இத கிப்ட்டா கொடுக்க முடியுமா ?என்று கடைக்காரரிடம் அடித்து கேட்டான் வெங்கடேசன்.

வேறு வழி இல்லை என்று தெரிந்த கடைக்காரர் சரி தரேன். ஆனா இத எப்படி கிப்ட்டா நான் பேக் பண்றது ?என்று விழித்தான்.

எப்படியோ உங்க சாமர்த்தியத்துல எனக்கு பார்சல் பண்ணி குடுங்க என்றான் வெங்கடேசன்.

அந்த சின்னப் பாத்திரத்தில் இருந்த தண்ணீரை கொட்டி விட்டு சின்னப் பாத்திரத்துடன் மூங்கில் செடியை பார்சல் செய்து கொடுத்தார்.

அதைச் சந்தோசமாக வாங்கிக் கொண்ட வெங்கடேசன் தன் முதலாளியின் வீட்டு திருமணத்திற்கு சென்று முதலாளியின் மகன் கையில் தான் வாங்கிய பரிசு பொருளையும் கொடுத்து விட்டு வாழ்த்துச் சொல்லி விட்டு வந்தான்.

அன்று இரவு முதலாளி வீட்டுக்கு வந்த பரிசுப் பொருட்களை பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அதில் வித்தியாசமாகவும் வேறு விதமாகவும் வெங்கடேசன் கொடுத்த பரிசு பொருள் இருப்பதைக் கண்டு வெங்கடேசன் முதலாளி வீட்டில் ரொம்பவே சிலாகித்து பேசிக் கொண்டார்கள்.

முதலாளியின் அப்பா அம்மா அந்த மூங்கில் ஒரு குறியீடாக நினைத்தார்கள்.

இங்கே வந்திருக்கிற கிப்ட் பொருளில்ல எதுவுமே எனக்கு பிடிக்கல. இந்த மூங்கில் தான் வித்தியாசமா இருக்கு. இந்த பரிசு பொருள கொடுத்தவர் யார்? என்று கேட்டாள் முதலாளியின் அம்மா .

வெங்கடேசன் என்று பதில் சொன்னார் முதலாளி .

இந்த பரிசுப் பொருள கொடுத்தவர் தான் திருமணத்திற்கும் இந்த பரிசுக்கும் சம்பந்தமா வித்தியாசமா கொடுத்திருக்கிறார்; மத்ததெல்லாம் எந்த அர்த்தமும் தராத பொருட்கள் தான்.

ஆனால் மூங்கில் அப்படி இல்லை அதுக்கு என்று ஒரு வரலாறு இருக்கு. அதுக்கு ஒரு உட்பொருள் இருக்கு என்று வெங்கடேசன் கொடுத்த மூங்கிலைப் பற்றி பெரிதாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

வெங்கடேசனை பெருமையாகவும் அவரு கொடுத்த பொருளை அது வேறொரு சிந்தனை என்றும் பேசிக் கொண்டிருந்ததை நினைத்த முதலாளி வெங்கடேசனுக்கு போன் செய்தார்.

வெங்கடேசன் நீங்க கொடுத்த கிப்ட் பிரமாதம். இதுவரைக்கும் யாருமே இந்த மாதிரி சிந்தித்தது இல்லை .நீங்க பண்ணி இருக்கிறது; சாதாரண விஷயம் மில்ல .எங்க அம்மா இந்த கிப்டை பார்த்து அழுதுட்டாங்க. அவ்வளவு அர்த்தம் இருக்கு .நீங்க கொடுத்த மூங்கில் கிப்ட் என்று முதலாளி சொன்ன போது,முதலாளியின் குடும்பத்தார்கள், அந்த அளவுக்கு புகழ்ந்து பேசும் அளவிற்கு நாம் பரிசு பொருள் கொடுக்கவில்லையே என்று நினைத்தான் வெங்கடேசன்.

ஆனால் அதனுடைய அர்த்தத்தின் விளக்கம் தெரிவதற்கு அவனுக்கு பத்து மாதங்கள் ஆனது . அதற்கு இடையில் அலுவலகம் வருவான். செல்வான் .முதலாளி மற்ற ஊழியர்களை விட அவனை கொஞ்சம் அனுசரணையாகவே பார்த்துக் கொள்வார்.

10 மாதங்கள் கழித்து முதலாளி வீட்டிலிருந்து வெங்கடேசுக்கு போன் வந்தது .

மூங்கில் மாதிரியே எங்க வீட்டுக்கு ஒரு வாரிசு வந்திருக்கு .உங்க மூங்கிலுக்கும் நீங்க கொடுத்த பரிசு பொருளுக்கும் எங்க வீட்டுல ஒரு வாரிசு பிறந்ததுக்கும் சம்பந்தம் இருக்கு பாருங்க .நீங்க குடுத்த மூங்கிலும் மூங்கில் குட்டி போட்டு இருக்கு .நம்ம வீட்டிலயும் ஒரு வாரிசு வந்திருக்கு. இதுதான் சார் புத்திசாலிங்க செய்ற வேலை என்று வெங்கடேசிடம் சொன்னபோது அதுவரையில் வித்தியாசமான பொருளைத்தான் முதலாளியின் மகனுக்கு பரிசளிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு அந்த மூங்கிலுக்குள் ஒரு வாரிசு இருக்கிறது என்பதை அவர்கள் சொல்லித்தான் அவன் தெரிந்து கொண்டதாக சொன்னான்.

இப்போது அந்த மூங்கில் தொட்டியில் மூங்கில் வாரிசுகள் நிறைய முளைவிட்டிருந்தது.

முதலாளியின் மகனுக்கும் ஒரு அழகான குழந்தை பிறந்திருந்தது

மூங்கில்செடியும் தன் வாரிசுகளுடன் தன் தொட்டியில் குதூகலித்துக் கொண்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *