சென்னை, பிப்.27-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் புகைப்பட கண்காட்சியை நாளை (செவ்வாய்க்கிழமை) மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திறந்து வைக்க இருக்கிறார்.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி, நாளை முதல் மார்ச் 12ந் தேதி வரை சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்க இருக்கிறது.
இந்தக் கண்காட்சியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திறந்து வைக்க இருக்கிறார். இதற்கான அழைப்பிதழை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனை சந்தித்து வழங்கினார். அப்போது, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உடன் இருந்தார்.
நாளை நடைபெறும் புகைப்பட கண்காட்சி திறப்பு விழாவில், அமைச்சர் சேகர்பாபு வரவேற்புரை ஆற்றுகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் எம்.பி., திரைப்பட நடிகர் ஜோ மல்லூரி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
புகைப்பட கண்காட்சி குறித்து அமைச்சர் சேகர்பாபு கூறும்போது, “புகைப்பட கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறு வயது முதலான அறிய புகைப்படங்கள் இடம் பெறும். இந்த கண்காட்சியை கமல்ஹாசன் திறந்து வைப்பதில் தி.மு.க. வினருக்கு மகிழ்ச்சி” என்றார்.