சென்னை, நவ. 29:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது.
தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
வருகிற டிசம்பர் 1ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்தும், 2 மாதங்களுக்கு ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பெறப்படும் பணி அறிக்கை குறித்தும் தமிழ்நாட்டில் அவரவர் தொகுதியில் எஸ்ஐஆர் மற்றும் இதர பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
முடிவில் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:–
* மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் போக்கும், ரெயில் திட்டங்களிலும் நிதி ஒதுக்கீட்டிலும் தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சகத்திற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மெட்ரோ ரெயில்:
மோடி தலையிட்டு…
* பிரதமர் நேரில் தலையிட்டு கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை அனுமதிக்க வேண்டும்.
* கோவை, மதுரை விமான நிலைய விரிவாக்கம், மதுரை பன்னாட்டு விமான நிலையத் திட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்க வேண்டும்.
* கலைஞர் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவும், ஆளுநருக்குக் கால நிர்ணயம் செய்யவும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்
* செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளைப் பாதுகாத்திட ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் வைத்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
* நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 17 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும்.
காவிக் கொள்கையைத்
திணிக்கும் பேயாட்டம்…
* கல்வியில் காவிக் கொள்கையைத் திணிக்கும் பேயாட்டத்தை நிறுத்தி 3548.22 கோடி ரூபாய் சமக்ர சிக்ஷா நிதியை உடனே விடுவிக்க வேண்டும்.
* ஒன்றிய அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளால் தொழிலாளர்களின் உரிமை பாதிக்கப்படக்கூடாது.
* இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விரைவாக விடுவிப்பதற்கும் நிரந்தரத் தீர்வு வேண்டும்.
* பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களின் பணி மற்றும் பதவி உயர்வினை ஒன்றிய அரசு பாதுகாத்திட வேண்டும்.
* கிராமப் புற ஏழை மக்களுக்கு முக்கியமான திட்டமாக இருக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியை உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
![]()





