செய்திகள்

மு.க.ஸ்டாலின், உதயநிதி மீது தேர்தல் ஆணையத்தில் அண்ணா தி.மு.க. புகார்

சென்னை, மார்ச் 21–

ஆறுமுகசாமி ஆணையத்தை கொச்சைப்படுத்துகிறார்கள் என்று மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மீது தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அண்ணா தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அண்ணா தி.மு.க. செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தி.மு.க. இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாகவும், மறைந்த தலைவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும் மக்களிடையே உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி, துவேஷத்தை தூண்டுகின்ற விதத்திலும் பேசி வருகின்றனர்.

குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் 19–ந் தேதி தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து பேசுகின்ற போது தேர்தல் விதி மீறலாகவும், மறைந்த தலைவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டனை தரக்கூடிய வகையிலும், தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர் அம்மாவின் மரணத்தை ஒட்டிய நீதி விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தின் விசாரணை நடைமுறைக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதத்திலும், விசாரணை ஆணையத்தை கொச்சைப்படுத்தும் விதத்திலும் தொடர்ந்து பேசி வருகிறார்.

20–ந் தேதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டம், தக்களையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை விமர்சிக்கின்ற விதமாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டறிய அமைக்கப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் ஒன்றும் செய்யாது, அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை, விசாரணை 4 வருடமாக நடந்துகிட்டு இருக்கு” என விசாரணை ஆணையத்தை விமர்சிக்கின்ற விதமாக தொடர்ந்து பேசிவருகிறார். இவ்வாறான பேச்சானது நீதிமன்ற அவமதிப்பு மட்டும் அல்லாமல், பொதுமக்களிடையே தவறான எண்ணங்களை பரப்பி அதன்மூலம் தேர்தல் ஆதாயம் அடையும் நோக்கத்தோடு செயல்படுவதாகும்.

எனவே, மேற்படி தொடர் தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டு வரும் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது, தேர்தல் நடத்தை விதிகளின்படியும், மறைந்த தலைவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துதலுக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின்படியும், நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு களங்கம் ஏற்படுத்துகின்ற நோக்கத்திற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பதிவு செய்து, தேர்தல் ஆணையம் இருவருக்கும் உடனடியாக அறிவுறுத்தல் ஆணை அனுப்பி இனி இதுபோன்ற அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *