சென்னை, ஆக. 1–
நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ரூ.5 கோடிக்கான காசோலையை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்புகொண்டு தம்முடைய ஆழ்ந்த வருந்தங்களையும் இரங்கலையும் தெரிவித்ததுடன், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்திருந்தார். அதன்படி, தமிழ்நாட்டிலிருந்து 2 இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளின் தலைமையில் மீட்புக்குழு மற்றும் மருத்துவக் குழுவினரை கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தேவையான மீட்பு மற்றும் மருத்துவப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் வழங்குவதாக முதலமைச்சர் 30.7.2024 அன்று அறிவித்திருந்தார். முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் நேற்று நேரில் சந்தித்து ரூ.5 கோடிக்கான காசோலையை அவரிடம் அளித்தார்.