போஸ்டர் செய்தி

மு.க.ஸ்டாலினை நம்பி யாரும் வாக்களிக்க வேண்டாம்; நம்பினால் ஏமாந்து போவீர்கள்: விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை, ஏப்.16-

சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது ‘தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நம்பி யாரும் வாக்களிக்க வேண்டாம். அவரை நம்பினால் ஏமாந்து போவீர்கள்’ என மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

ஒவ்வொரு தேர்தலின்போதும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக அவர் வீட்டிலேயே ஓய்வு எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அவருக்கு பதிலாக அவருடைய மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் இன்று முடிவடைய உள்ள நிலையில், சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் நேற்று செய்தார். பிரச்சார வேனில் வேட்பாளர்கள் நின்றபடி இருக்க, விஜயகாந்த் இருக்கையில் அமர்ந்திருந்தவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வில்லிவாக்கம் பஸ் நிலையம் அருகே விஜயகாந்த் தனது பிரசாரத்தை தொடங்கினார். அங்கு மத்திய சென்னை பா.ம.க. வேட்பாளர் சாம் பாலை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். கூட்டணி கட்சியினரும் பொதுமக்களும் விஜயகாந்த்தை காண திரண்டனர். மாலை 6.45 மணிக்கு பிரத்யேக பிரச்சார வாகனத்தில் வந்த விஜயகாந்த், அங்கு திரண்டிருந்தவர்களைப் பார்த்து புன்னகையோடு கையசைத்து வணக்கம் தெரிவித்தார்.

பின்னர் அவர் பேசும்போது, ‘‘நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். வணக்கம். இந்த தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சாம் பாலுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ என கூறினார். அதைத் தொடர்ந்து கொளத்தூர், பெரம்பூர், திரு.வி.க.நகர், ராயபுரம், திருவொற்றியூர், ஆர்.கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வடசென்னை தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜூக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். பெரவள்ளூரில் விஜயகாந்த் பேசும்போது, ‘‘தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நம்பி யாரும் வாக்களிக்க வேண்டாம். அவரை நம்பி வாக்களித்தால் ஏமாந்து போவீர்கள். முதல்வர் பழனிசாமி நல்ல உள்ளம் படைத்தவர். மேலும், நல்ல உள்ளம் படைத்த வடசென்னை தே.மு.தி.க. வேட்பாளர் மோகன்ராஜூக்கு முரசு சின்னத்தில் வாக்குகளை அளியுங்கள்’’ என்றார்.

விருகம்பாக்கம் பகுதியில் தென்சென்னை அண்ணா தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தனுக்கு வாக்கு சேகரித்தார். விஜயகாந்தின் பிரச்சார வாகனத்தை பின்தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க. நிர்வாகிகள் தங்களுடைய வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்.

செல்லும் வழியெல்லாம் சாலையோரம் நின்றிருந்த கட்சியினரையும் பொதுமக்களையும் பார்த்து விஜயகாந்த் கையசைத்து வணக்கம் தெரிவித்தபடி சென்றார். விஜயகாந்தின் பிரச்சாரத்தால் தே.மு.தி.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். வழிநெடுகிலும் அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *