செய்திகள்

மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: ஓய்வு எடுக்க டாக்டர் ஆலோசனை

சென்னை, நவ.5–-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முதலமைச்சராக பதவி ஏற்றது முதல், மு.க.ஸ்டாலின் ஓய்வின்றி பல இடங்களுக்கு சென்று பணியாற்றி வருகிறார். அதில் முக்கியமாக கள ஆய்வுப் பணியில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். மேலும், அடுத்தடுத்து பல்வேறு அரசு விழாக்களுக்கும் சென்று மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பது, மக்களை சந்திப்பது, நீண்ட நேரம் உரையாற்றுவது என ஓய்வு எடுக்காமல் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அவருக்கு இருமல் மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்திலும், வெளியிடங்களிலும் அவர் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டு வந்தன.

நேற்று காலையில், நலவாழ்வு நடைப்பயிற்சி 8 கி.மீ. சுகாதார நடைபாதை திட்டத்தை சென்னை அடையாறில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் அந்த திட்டத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வைரஸ் காய்ச்சல்

இந்த நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மெட்ராஸ் இ.என்.டி. ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைமை டாக்டரும், இயக்குனருமான பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-–

முதலமைச்சருக்கு கடந்த 3–-ந் தேதியில் இருந்து இருமல் மற்றும் காய்ச்சல் ஆகிய நோய் அறிகுறிகள் காணப்பட்டன. அவருக்கு ‘புளு வைரஸ்’ காய்ச்சல் ஏற்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது. எனவே அதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சில நாட்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *