செய்திகள்

மு.க. ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

சென்னை, ஏப்.2–

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் வரும் 6ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் சமீப காலமாக தேர்தல் ஆணையத்தினர் பறக்கும் படைகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல வருமான வரித்துறையினரும் பல இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை – மருமகன் சபரீசன் ஆகியோரது இல்லத்தில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சபரீசனுக்கு சொந்தமான 5 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் அண்ணா நகர் தொகுதி திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலையில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *