செய்திகள்

மு.க.ஸ்டாலினின் நலத்திட்டங்கள் பெண்களின் பெருமை பேசும் ஆவணங்கள்

சென்னை, மார்ச்.6-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகளிர் நலத்திட்டங்கள் பெண்களின் பெருமை பேசும் ஆவணங்கள் என்று தமிழ்நாடு அரசு சார்பில் பெருமிதத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினம் வருகிற 8-ந் தேதி (நாளை மறுதினம்) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் நலனுக்காக செயல்படுத்தி உள்ள திட்டங்களை பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-–

மகளிர் சமுதாயம் வீட்டிற்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த கொடுமையை எதிர்த்து பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் போராடியதன் விளைவாக பெண்கள் சமுதாயம் இன்று எழுச்சிப் பெறத் தொடங்கியுள்ளது. கருணாநிதி, தமிழ்நாடு முதலமைச்சராக வீற்றிருந்த காலத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கான கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு, சொத்துரிமை, உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு, மகளிர் திட்டம் மகளிர் சுயஉதவி குழுக்கள் முதலான பல திட்டங்களை நிறைவேற்றினார். இத்திட்டங்களால் பெண்கள் வாழ்வில் உயர்ந்து பொருளாதார விடுதலை பெற்றுள்ளனர்.

கருணாநிதியின் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிறப்பால் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதைக் கூறி, ஆண், பெண் என்ற வேறுபாட்டை நீக்கி 3 பெண்களை அர்ச்சகர்களாக நியமித்து, 5 பெண்களை ஓதுவார்களாக பணியில் அமர்த்தி சாதனை படைத்துள்ளார்.

பெண்களுக்கான உரிமை

சமூகத்தில் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதில் தி.மு.க. அரசு முனைப்புடன் செயல்படும் என்றும், ஆண்களுக்கு நிகரான சமநிலையைப் பெண்கள் விரைவில் அடைவார்கள் என்றும் எப்போதும் சொல்லிவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2021 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் பெண்களுக்கான கட்டணமில்லா பஸ் பயணம் உள்பட முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டு மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளார். இதனால் பெரிதும் பயனடைந்துள்ளதாக வேலைக்கு செல்லும் மகளிர் பலரும் தெரிவித்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 லட்சம் பெண்கள் கட்டணமில்லா பஸ் பயணம்-விடியல் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, பின்னர் உயர்கல்வி படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி “புதுமைப்பெண் திட்டம்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 5.9.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் மாதந்தோறும் 2.73 லட்சம் மாணவிகள் பயனடை கின்றனர். மேலும் இந்த முயற்சியின் விளைவாக நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் படித்து, கல்லூரி களில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.

வீட்டில் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உழைக்கும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டு பெண்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டு பெண்களிடையே இத்திட்டத்திற்கு கிடைத்துள்ள ஆதரவைப் பார்த்து, வேறு பெயர்களில் தங்கள் மாநிலங்களிலும் இந்த திட்டத்தைச் செயல்படுத்த பிற மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இத்தகைய சிறப்பான திட்டங்களால் மகளிர் சமுதாயம் அடைந்து வரும் முன்னேற்றம், தன்னம்பிக்கை உணர்வு, சமத்துவச் சிந்தனை இவை யெல்லாம் பெண்களின் பெருமை பேசும் ஆவணங்களாக திகழ்கின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *