செய்திகள்

முழு ஊரடங்கு : மதுரை வெறிச்சோடியது

முழு ஊரடங்கு : மதுரை வெறிச்சோடியது

* போக்குவரத்தை கட்டுப்படுத்த சாலை தடுப்புகள்

* 14 இடங்களில் சோதனை சாவடிகள்

 

மதுரை,ஜூன்.24–

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு மதுரை மாநகராட்சி பகுதி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் மட்டும் அமுலுக்கு வந்துள்ளது. இதனால் மதுரை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

போக்குவரத்தை கட்டுப்படுத்த ஆங்காங்கே சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. 14 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பரபரப்பாக எப்போதும் காணப்படும் கடைகள் நிறைந்த கீழமாசி வீதி முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு வெறிச் சோடி காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று குறைந்து வந்தது. அதன் பிறகு மண்டலமாக பிரிக்கப்பட்டதினால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலர் மதுரைக்கு வந்தனர். இதனால் மதுரை நகரில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. நேற்று 135 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க மதுரையில் நேற்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. மதுரை மாநகராட்சி பகுதிகள், பரவை பேரூராட்சி பகுதி, மதுரை கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களில் மட்டும் நேற்று நள்ளிரவு முதல் 30–ந் தேதி வரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு காரணமாக மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

பஸ், கார், ஆட்டோ ரத்து

முழு ஊரடங்கு காரணமாக மதுரை நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம், ஆகிய பகுதிகளில் கடைகள் இன்றி, பஸ்கள் இன்றி, ஆட்டோக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக மதுரை நகரில் கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. கடைகள் நிறைந்த மதுரை கீழமாசிவீதி, நேதாஜி ரோடு, போன்ற பகுதிகளில் எல்லாம் வெறிச்சோடி காணப்பட்டன.

முழு ஊரடங்கு உத்தரவினால் மதுரை நகருக்கு பஸ்கள் வராமல் புறநகர் பகுதிகயிலேயே நிறுத்தப்பட்டது. சாத்தூர், சிவகாசி, ராஜபாளையத்திலிருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் திருமங்கலம் வரை மட்டுமே இயக்கப்பட்டது. அருப்புக்கோட்டையிலிருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் காரியாபட்டி வரை மட்டுமே இயக்கப்பட்டது. ராமநாதபுரம் மானாமதுரை மார்க்கத்திலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் திருப்புவனம் வரை மட்டுமே இயக்கப்பட்டது. சிவகங்கை மார்க்கத்திலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் பூவந்தி வரை மட்டுமே இயக்கப்பட்டது. சிங்கம்புனரி, கொட்டாம்பட்டி மற்றும் திருப்பத்தூர் மார்க்கத்திலிருந்து மதுரைக்கு மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் மேலூர் வரை மட்டுமே இயக்கப்பட்டது, நத்தம் பகுதியிலிருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் கடவூர் வரை மட்டுமே இயக்கப்பட்டது, திண்டுக்கலிருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் வாடிப்பட்டி வரை மட்டுமே இயக்கப்பட்டது. தேனி, உசிலம்பட்டி வழியாக மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் செக்காணூரனி வரை மட்டுமே இயக்கப்பட்டது.

முழு ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டதை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

சோதனை சாவடிகள்

முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக அமுல்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை மாநகர் பகுதிகளில் 6 இடங்களிலும் புறநகர் பகுதிகளில் 8 இடங்களிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவை தவிர ஆங்காங்கே சாலை தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் தேவையின்றி நடமாடுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய – மாநில அரசு அலுவலகங்கள் 30 சதவீதம் பணியாளர்களுடன் செயல்படுகிறது.

டாஸ்மாக், கடைகள் மூடல்

முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கவில்லை. இது தவிர மொத்த விற்பனை காய்கறி சந்தைகள், இறைச்சி, கோழி மற்றும் மீன் மொத்த விற்பனை கடைகளும் இயங்கவில்லை.

மக்கள் நடமாட்டதை கட்டுப்படுத்த செல்லூர் பாலத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடும் நடவடிக்கை

மதுரை நகரில் தேவையின்றி வெளியே சுற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :–

பொதுமக்கள் வசதிக்காக காய்கனிகள், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க காலை 5 முதல் பிற்பகல் 2 மணி வரை அனைத்துப் பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டிருக்கும். அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக வேறு பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். அத்துடன் அத்தியாவசியத் தேவைகளின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. பொது இடங்களுக்கு வரும் போது சமூக இடைவெ ளியைக் கடைபிடிப்பதுடன் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். வாகனங்களில் சுற்றுவது கூட்டம் கூடுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பொது முடக்க விதிகளை மீறுவோர் மீது இந்திய தண்டனை சட்டம், கொள்ளை நோய் சட்டம், தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தீநுண்மித் தொற்று பரவலை காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *