சிறுகதை

முழு உடல் பரிசோதனை – ராஜா செல்லமுத்து

மருத்துவமனைகள் எல்லாம் முழு உடல் பரிசோதனை செய்ய குறைந்த கட்டணம் என்று ஒவ்வொரு மருத்துவமனையும் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது . ஆயிரம் ரூபாயில் தொடங்கி பத்தாயிரம், இருபதாயிரம் என்று முழு உடல் பரிசோதனைக்கு கட்டணம் வசூல் செய்கிறார்கள். முழு உடல் பரிசோதனை செய்ய மக்கள் ரொம்பவே ஆர்வம் காட்டுகிறார்கள்.

தன் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு பகுதியையும் கண்டுபிடித்து அதற்கு மருத்துவம் செய்ய வேண்டும். நமது உடலில் இருக்கும் எந்த நோயையும் முழு உடல் பரிசோதனை காட்டிக் கொடுத்து விடும் என்று மக்கள் முழு உடல் பரிசோதனை செய்ய கொத்துக் கொத்தாக சென்று கொண்டிருக்கிறார்கள்.

இதைக் காரணம் காட்டி அன்பு முழு உடல் பரிசோதனை செய்வதற்காக ஒரு மருத்துவமனையை நாடி இருந்தான். அவனுக்கு உடலில் எந்த விதமான வியாதியும் இல்லை என்றாலும் முழு உடல் பரிசோதனை செய்வது அவசியம். நல்லது ‘தற்காப்பு’ என்று நினைத்தான் அன்பு. அதன்படியே ஒரு பிரபலமான மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்ய ஆயத்தமானான். அவன் சோதனை செய்வதற்கான நாள் குறிக்கப்பட்டு, அவனை மருத்துவமனைக்கு வரச் சொன்னார்கள். பணத்தைக் கட்டிவிட்டு பரிசோதனைக்குத் தயாரானார் அன்பு.

அப்போது தலை முதல் கால் வரை அவனை பரிசோதனை செய்தார்கள் மருத்துவர்கள். ஸ்கேன், எக்ஸ்ரே என்று எல்லாம் எடுத்து அவனை மறுநாள் வர சொன்னார்கள் .

அதுவரையில் எந்த நோய் நொடி இல்லாமல் இருந்த அன்பு முழு உடல் பரிசோதனை முடிவு வருவதற்காக காத்திருந்தான்.

மறுநாள் ரொம்பவே சந்தோஷமாக முழு உடல் ரிசல்ட் வாங்குவதற்கு மருத்துவமனையில் காத்துக் கொண்டிருந்தான். அப்போது மருத்துவமனை நிர்வாகம் அவனுடைய பரிசோதனை முடிவை அவனது கையில் கொடுத்து கூடவே பயத்தையும் சேர்த்துக் கொடுத்தது.

மருத்துவரின் அருகில் வந்த அன்புவை ஒரு மருத்துவர் எச்சரித்தார் .

‘சரியான நேரத்துக்கு நீங்க ஆஸ்பத்திரி வந்தீங்க. உங்க உடம்புல பயங்கர நோய்களுக்கான அறிகுறி எங்களுக்கு தெரிந்தது. அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். யார் சொல்லி நீங்க இங்க வந்தீங்க என்று தெரியாது .ஆனா சரியான நேரத்துக்கு வந்துட்டீங்க’ என்று மருத்துவர் சொல்ல….

‘சார் எனக்கு எந்த நோயும் இல்லையே? அதற்கான அறிகுறி எதுவும் எனக்குத் தெரியலையே?’ என்று அன்பு அடித்துச் சொல்ல…

‘அதெல்லாம் உங்களுக்குத் தெரியாது. மருத்துவம் படித்த எங்களுக்குத்தான் தெரியும். உங்களுக்குப் பெரிய நோய்க்கான அறிகுறிகள் எங்களுக்கு தெரியுது. அதனால நீங்க உடனே மருத்துவமனையில் சேருங்க’ என்று அந்த முழு உடல் பரிசோதனை செய்த மருத்துவமனை சொன்னது.

பயத்தை மடியில் கட்டிக் கொண்டு அன்பு அப்போதே மருத்துவமனையில் சேர்ந்தான். அவசர அவசரமாக அவனுக்கு மருத்துவம் செய்யப்பட்டது. இரண்டு, மூன்று நாட்கள் கழித்துப் பல லட்சங்களைப் பிடிங்கி அந்த மருத்துவமனை அவனை சக்கையாக வெளியில் துப்பியது.

அந்த மருத்துவமனையில் எடுத்த ட்ரீட்மென்ட் அவனுக்கு மன ஆறுதலை தந்தது. சில நண்பர்கள், சில உறவுகள் அன்புவை நேசிப்பவர்கள் ‘நீங்க இன்னொரு மருத்துவமனையில இவங்க பண்றது கரெக்ட்டா அப்படின்னு பாருங்க’ என்று சொல்லவே, அன்பு அந்த முழு உடல் பரிசோதனையை எடுத்துக் கொண்டு இன்னொரு மருத்துவமனைக்குச் சென்றான்.

அங்கே அதைப் பார்த்த மருத்துவர்கள், ‘உங்களுக்கு ஒன்றும் இல்லை. இந்த முழு உடல் பரிசோதனையில் எதுவும் தவறாக இல்லை. நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்’ என்று சான்றிதழ்கள் தந்தார்கள்.

‘இல்ல சார்…. எனக்கு உடம்பு நல்லா இல்ல… பயங்கர வியாதி இருக்குன்னு அந்த மருத்துவமனையில் சொன்னாங்களே’ என்று சொன்னபோது, ‘நீங்க கொடுத்த ரிசல்ட் ல அப்படி எல்லாம் எதுவும் இல்லை. அந்த மாதிரி பயம் உங்களுக்கு இருந்ததுன்னா நீங்க எங்க மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை எடுங்க. அப்ப நான் சொல்ல முடியும்’ என்று அந்த மருத்துவமனையும் அன்புவிடம் அப்பிளிகேஷன் போட்டது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அன்புவின் நண்பர், ‘எல்லா ஆஸ்பத்திரிகளும் பணம் புடுங்குற வேலையைத் தான் பாத்துட்டு இருக்காங்க. முழு உடல் பரிசோதனைங்கிற பேர்ல உடம்புல இல்லாத வியாதியைச் சொல்றாங்க. ஏதாவது நோயைச் சொல்லி நம்மள நோயாளியாக்கிடுறாங்க. அதுக்குத்தான் அதனாலதான் நான் எந்த பரிசோதனையும் செய்றதில்லை. இறைவன் விட்ட வழி எதுவோ அதுவே சரின்னு போயிட்டு இருக்கேன்’ என்று சொன்னான்.

அன்புக்கும் அதுதான் சரி எனப்பட்டது. இனிமேல் உடம்பு அது போற போக்கில் போகட்டும். நாமலே அதை திசை திருப்பக் கூடாது என்று அந்த முழு உடல் பரிசோதனை செய்வதை நிறுத்தினான்.

அது முதல் எந்த மருத்துவமனைக்கும் தான் போவதில்லை என்பதை முடிவு செய்தான் அன்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *