அமெரிக்காவில் இஸ்ரேல் பிரதமர் கொக்கரிப்பு
நியூயார்க், ஜூலை 26–
போரில் முழுமையான வெற்றி கிடைக்கும் வரை, ஹமாஸ் அமைப்பினருடன் போரை தொடர்ந்து நடத்துவோம் என இஸ்ரேல் பிரதமர் கொக்கரித்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ந்தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது. போரில் இதுவரை 38,000 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து போர்
இந்த சூழலில், அமெரிக்க நாடாளுமன்ற 2 அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆற்றிய உரையில், ‘ஹமாஸ் அமைப்பினருடனான போரில் முழுமையான வெற்றி கிடைக்கும் வரை அந்தப் போரை தொடர்ந்து நடத்துவோம். இஸ்ரேலின் நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து பரிசீலிப்போம் என்றார்.
நெதன்யாகுவின் அமெரிக்க நாடாளுமன்ற உரைக்கு ஹமாஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவுக்கு நெதன்யாகு சென்றது, போர் விவகாரத்தில் தனக்கு நல்ல பெயரைத் தேடிக்கொள்ளத்தான். நெதன்யாகு உரையால், காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சமரச நடவடிக்கைகள் மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.