Uncategorized

முள்ளை முள்ளால் – மு.வெ.சம்பத்

சிராஜ் அந்தக் காவல் நிலையத்தில் தலைமை அதிகாரியாக இன்று பணியில் சேர்ந்தார். அந்தக் காவல் நிலையத்தின் கீழ் மொத்தம் ஐந்து கிராமங்கள் , அதன் சுற்றுப்புறங்கள் வருகின்றன.

சிராஜ் முதலில் தான் சேகரித்த தகவல்களுக்கு இங்கு இருப்பவர்கள் கூறுவது ஒத்து வருகிறதா என்று சோதிப்போம் என முடிவு செய்து காவல் நிலையத்தில் வெகு நாட்களாக இருப்பவரான கணேசனிடம் கேட்டார். அவர் நிறைய தகவல்கள் தந்தார். கூடவே அடி தடியில் ஈடுபடும் நபர்கள் பெயர் மற்றும் விலாசம் பற்றிய ஒரு நோட்டைத் தந்தார்.

மேலும் எதற்கெல்லாம் அவர்கள் இடையே தகராறு வந்து சண்டை முற்றிப் போய் வெட்டு குத்து வருவதைக் கூறினார்.

சிராஜ் கிராமங்கள் இடையே தகராறு வருமா அல்லது கிராமத்திற்குள்ளேயே வருமா எனக் கேட்க கிராமங்கள் இடையே வருவது குறைவு தான், கிராமங்கள் உள்ளுக்குள்ளே தான் அடிக்கடி தகராறு வந்து நம் காவல் நிலையம் முன் கூடி விடுவார்கள். சமரசம் செய்து அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகி விடும் என்றார். நம் காவல் நிலைய ஆட்களுக்கு ஏதும் பாதிப்பு இல்லையே என்று கேட்க அதெல்லாம் என்றும் ஏற்பட்டதில்லையெனக் கூறினார். சரி. அந்த ஊரில் ஊர்த் தலைவர் கிடையாதா, ஊர்க் கட்டுப்பாடு என்று ஒன்று இருக்குமே, அதெல்லாம் இல்லையா அல்லது பின்பற்றுவது இல்லையா என்று கேட்க ஊர்த் தலைவர் ஒரு காலத்தில் முரடன் மற்றும் அடங்காதவராகத் தான் இருந்தவர் என்று கூற மேற்கொண்டு என்ன செய்தால் இவர்களை எல்லாம் சரி செய்யலாமென கேட்க. யோசித்துத் தான் செய்ய வேண்டுமென அங்குள்ளவர்கள் கூற ஊரிலிருந்து வெளியேறியவர்கள் நன்றாக இருக்கின்றார்களா என்று கேட்க நன்றாக இருந்தாலும் இந்த ஊரின் மீது அவர்களுக்கு ஒரு கண் உள்ளதெனக் கூறினார்கள்.

இந்த ஊரிலிருந்து சென்றவர்கள் பெயர் விவரம் தர முடியுமா எனக் கேட்க அரசாங்க வேலை பார்ப்பவர்கள்,. தனியார் நிறுவனத்தில் பணிபுரிவர்கள், இதர வேலை செய்பவர்கள் என தனித்தனியாக தருகிறேன் என்றார் கணேசன்.

இரண்டொரு நாளில் தருகிறோம் என்று கூறியதும் சிராஜ் மற்ற பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட வேளையில் காவல் நிலையம் வாயிலில் ஏகப்பட்ட சப்தம் மற்றும் மக்கள் திரண்டு இருந்ததைக் கண்டு ஆரம்பமாச்சா என மனதிற்குள் நினைத்தார் சிராஜ்.

வந்திருந்த நபர்களில் சில பேரை மட்டும் அழைத்து என்ன பிரச்னை என்று வினவினார் சிராஜ். அவர்கள் சொன்னதைக் கேட்டு பின் தகுந்த ஆலாசனைகளை வழங்கினார். வந்திருந்தவர்களிடம் இவரது ஆலோசனைப் பற்றிக் கூற, சிறு சலசலப்பிற்கிடையே ஒரு சமாதானம் ஏற்பட்டு கலைந்து சென்றனர்.

வரும் பிரச்னைகள் சற்று நிதானமாகவே கவனித்து செயல்பட வேண்டுமென சிராஜ் முடிவுக்கு வந்தார்.

மறுநாள் சிராஜ் கணேசனுடன் ஒரு கிராமத்திற்குச் சென்றார். அங்கு வந்த காவல் துறை அதிகாரிகளைக் கண்ட மக்கள் போலீஸ் போலீஸ் என்று கூறினார்கள். சிலர் வீட்டுக் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே சென்றனர். சிராஜ் அங்கு இருந்தவரிடம் ஊர்த் தலைவர் வீடு கேட்டு அங்கு சென்றார். அவர்களை வரவேற்ற ஊர்த்தலைவர் சொன்னால் நானே வந்திருப்பேனே என்றார். பின் சிராஜ் சில விஷயங்கள் பேசி விட்டு ஏன் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுகிறது என்றார். இதற்கு ஊர்த் தலைவர் மழுப்பலான பதிலைக் கூற கிராமம் அமைதி பெற என்ன செய்யலாமென கேட்க அப்போது அங்கு வந்த ஐந்து பேர்கள் ஊர்த் தலைவரிடம் இவர் தான் புதிதாக வந்த காவல் நிலைய அதிகாரியா என்று கேட்க

ஊர்த் தலைவர் ஆமாம் என்றார்.

இதற்குள் அதில் ஒரு நபர் யானையை பானையில் அடக்க வந்துள்ளீரா, நாட்டுப் பூனை புலியை வெல்ல முடியுமா என எக்காளமாவும் ஒரே தொனியில் நக்கலாகவும் கூறினான். இதைக் கேட்ட சிராஜ் எதுவும் பேசாமல் மனதிற்குள் ஒரு எண்ண ஓட்டத்தை ஓட விட்டார்.

அவர்கள் சென்றதும் ஊர்த் தலைவர் ஐயா நீங்கள் சொல்ல வந்ததைக் கூறுங்கள் என்றார். எங்களுக்கு காவல் நிலையம் வருவது புதிதல்ல என்றார். இந்த போராட்டம் நீடிப்பதை தற்போது கிராம மக்கள் விரும்புவதில்லை என்றார். யோசித்து ஏதாவது செய்வோம் என்றார்.

சிராஜ் சரி நாங்கள் கிளம்புகிறோம் என்றார்.

அந்தக் கிராமத்தை விட்டு வெளியில் மெயின் ரோடில் சிறிது தூரம் வந்ததும் சிராஜ் வண்டியை நிறுத்தி கணேசனிடம் நம் அலுவலகத்தில் இவர்களுக்கு ஒத்து போகிற ஆட்கள் இருக்கின்றார்களா என கேட்க, கணேசன் சற்று அமைதிக்குப் பிறகு, கண்ணாயிரம் மற்றும் கந்தன் இருவரும் தான் அடிக்கடி கிராமங்களுக்குச் செல்வார்கள். அவர்களுக்குத் தான் கிராமங்களின் ஆட்கள் தொடர்பு அதிகம் என்றார். உடனே சிராஜ் சரி நீங்கள் விடுமுறையில் எப்போது சென்றீர்கள் என்று கேட்டார்.

வெகு நாட்கள் ஆச்சு சார் என்று கணேசன் கூற, நீங்கள் நாளை முதல் ஒரு வாரம் விடுமுறையில் செல்லுங்கள் என்றார் சிராஜ். கணேசன் மகிழ்வுடன் சரியென்று கூறினான்.

அலுவலகம் வந்த சிராஜ் மனதிற்குள் இரண்டு பேரையும் அவர்களுக்குத் தெரியாமல் கண்காணிக்க நினைத்தார். இவர்களிடம் ஏதாவது கேட்டால் விஷயம் வெளியேறி விடுமென நினைத்த சிராஜ் இவர்களுக்கு அலுவலகத் திலேயே வேலைகள் செய்யுமாறு ஏற்பாடு செய்தால் தான் சில அதிரடி நடவடிக்கைகளைத் தொடர முடியுமென முடிவு ஏடுத்தார்.

அடுத்தடுத்து கிராமங்களுக்கு சென்று நிலவரம் அறிந்து வந்தார் சிராஜ். சில முக்கிய தகவல்களை சேகரித்த சிராஜ், கணேசன் விடுமுறையில் இருந்து வந்ததும் கேட்கலாமென முடிவு செய்தார்.

அதற்கிடையில் கண்ணாயிரம் மற்றும் கந்தனிடம் கணேசன் பற்றி விசாரிக்க, அவர்கள் கணேசன் எதற்கும் உதவாதவர், பிழைக்கத் தெரியாதவர், நேர்மையின் உதாரணம் என்றதோடு நாங்கள் உங்களுக்கு வேண்டியதைச் செய்கிறோம் என்றனர் கோரசாக. சிராஜ் சிரித்துக் கொண்டே, நீங்கள் நான் தந்த வேலையை முடியுங்கள் என்றார்.

கணேசன் விடுமுறை முடிந்து வந்ததும் சிராஜ் கண்ணாயிரம் மற்றும் கந்தன் இவர்களை பணி நிமித்ததாக அனுப்பி விட்டு முக்கியமான அடுத்த கட்ட நடவடிக்கைகளில் மூழ்கினார்.

சிராஜ் மற்றும் கணேசன் தாங்கள் சென்ற கிராமங்களில் உள்ள நிலவரங்களை ஆராய்ந்தார்கள். கண்ணாயிரம் மற்றும் கந்தன் போகும் கிராமங்களில் எல்லாம் வந்திருக்கும் அதிகாரிக்கு அனுபவம் பத்தாது, சொன்னனாலும் கேட்க மாட்டார் போலும், ஏதும் அதிரடியாக செய்யப் பயப்படுவார் போலிருக்கு என்றார்கள். அந்த கிராமத்தில் உள்ள அந்த ஐந்து பேரிடம் வந்திருக்கும் அதிகாரியால் ஒன்றும் செய்ய இயலாது போலிருக்கு, நாங்கள் எப்போதும் போல் உங்களுக்கு செய்தி சொல்கிறோம் என்றனர்.

அந்த ஒரு கிராமத்தில் உள்ள ஐந்து பேர் தான் எல்லா பிரச்னைகளுக்கும் காரண கர்த்தா என்பதை ஒருவாறாக அனுமானித்த சிராஜ் அடுத்த நடவடிக்கைக்கு ரகசியமாகத் தயாரானார். அப்போது அங்கு வந்த ஊர்த்தலைவர் தங்களது கிராம விழாவிற்கு வருமாறு அழைப்பைத் தந்தார். சிராஜ் அவரிடம் என்றைக்கு விழா எனக் கேட்டார். ஊர்த் தலைவர் கூறியதும் சரியெனச் சொன்னதொடு கட்டாயம் விழாவிற்கு வருவதாகக் கூறினார்.

விழாவிற்கு முதல் நாள் ஊரே விழாக் கோலம் பூண்டிருக்கையில் மதிய உணவுக்குப் பின் நெல் போரடிக்கின்ற இடத்தில் ஒரே ரகளை, வெட்டுக் குத்து என செய்தி வர, சிராஜ் மற்றும் காவல் நிலையத்தில் உள்ளவர்கள் விரைந்து சென்று அந்த இடத்தை நோக்குகையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த அந்த ஐந்து பேரும் அடி பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். கூடியிருந்த ஊர் மக்களிடம் கேட்ட போது முகமூடி அணிந்த பலர் இவர்களை ஒரு விஷயம் பேச வேண்டுமென அழைத்துச் சென்று இப்படியாக்கி விட்டார்கள் என்றனர். சிராஜ் உடனே அவர்களை டவுன் மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். யாரந்த அவர்கள் என்று தெரியாமல் கிராம மக்கள் தவித்தனர். சிராஜ் அவர்களை எப்படியும் பிடித்து விடுவோம் என்று வாக்குறுதி தந்து நகர்ந்தார்.

மறு நாள் திருவிழா நன்கு நடந்து முடியும் தருவாயில் சிராஜ் தனது சக அலுவலர்களுடன் ஒரு வேனில் வந்து இறங்கினார். ஊர்த் தலைவர் அவரை வரவேற்றவுடன், சிராஜ் பத்து பேரை வேனிலிருந்து இறக்கியதும் ஊர்த் தலைவர் இவர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் தான், ஏன் பிடித்து வைத்துள்ளீர்கள் என்றதும் முகமூடி அணிந்த வந்தவர்கள் இவர்கள் தான் எனக் கூற, ஊர்த்தலைவர் தன்யாசி நீயா இதைச் செய்தாய் எனக் கேட்டார்.

கிராமங்கள் அமைதியே முக்கியமென செய்து விட்டேன் என்றான். சரி நாங்கள் கிளம்புகிறோம். இனிமேல் நிம்மதியாக வாழுங்கள் என்றார் சிராஜ். மக்கள் ஒட்டு மொத்தமாக வாழ்த்த வேன் நகர்ந்தது.

கணேசன் சிராஜ் காதில் முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பது சரியாகி விட்டது. மேலும் பழி வாங்கப்பட்டவன் பழி தீர்த்துக் கொண்டான் என்றார்.

மறு நாள் செய்தித் தாளில் அமைதி திரும்பிய கிராமங்கள் என்ற தலைப்பில் செய்திகள் வந்தன, ஒரு செய்தித்தாளை கையில் எடுத்த சிராஜ் கணேசனை நோக்க

அந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் மறைந்திருந்தன,

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *