செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுப்பதா?

Makkal Kural Official

கேரள அரசுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்

சென்னை, அக். 18–

உச்ச நீதிமன்ற தீர்ப்பினை முற்றிலும் அவமதிக்கும் வகையில், முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத கேரள அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், பேபி அணை மற்றும் சிற்றணை ஆகியவை பழுதுபார்க்கப்பட்டு, பலப்படுத்தப்பட்ட பின் அணையின் நீர் மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் 27-.02.-2006 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பிற்கு எதிராக 18.-03.-2006 அன்று சட்டத் திருத்தத்தை கேரள அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் அம்மா வழக்குத் தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தது. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி, மத்தியில் தி.மு.க. தயவில் காங்கிரஸ் ஆட்சி 2006 முதல் 2011 வரை நடைபெற்றது. ஆனால், முல்லைப் பெரியாறு அணை வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட வேண்டுமென்ற அக்கறையே தி.மு.க.விற்கு இல்லை.

புரட்சித் தலைவி அம்மா 2011–ம் ஆண்டு மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், முல்லைப் பெரியாறு வழக்கினை துரிதப்படுத்தி, புகழ் பெற்ற வழக்கறிஞர்களை உச்ச நீதிமன்றத்தில் வாதிட வைத்து, ஒரு மிகப் பெரிய சட்டப் போராட்டம் நடத்தியதன் விளைவாக, 7-.5-.2014 அன்று உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு சாதகமான தீர்ப்பினை அளித்தது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், 2006–ம் ஆண்டு தீர்ப்பினை உறுதி செய்ததோடு, கேரள அரசின் சட்டத் திருத்தத்தை ரத்து செய்தது.

தீர்ப்பு வந்து

10 ஆண்டாகியும்…

இந்தத் தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளவும், பேபி அணை மற்றும் சிற்றணை ஆகியவை பழுதுபார்க்கப்பட்டு பலப்படுத்தப்பட்ட பின்பு அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்கு கேரள அரசு எவ்வித இடையூறும் அளிக்கக்கூடாது என்றும் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து பத்து ஆண்டுகளாகியும், முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, பேபி அணை உள்ளிட்ட முல்லைப் பெரியாறு அணைப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு அதிகாரிகளிடம் தமிழக அதிகாரிகள் ஆறு மாதங்களுக்கு முன்பே விண்ணப்பித்து இருந்ததாகவும், இருப்பினும் இதற்கான அனுமதி கேரள அரசால் இதுவரை அளிக்கப்படவில்லை என்றும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில் ஆய்வு செய்து பயனில்லை என்று தெரிவித்து மத்தியக் குழு புறக்கணித்து விட்டதாகவும், தமிழக அரசு அதிகாரிகளும் செல்லவில்லை என்றும், மத்தியக் குழுவின் தலைவர் கேரள அரசு அதிகாரிகளுடன் அணையை பார்வையிட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

கேரள அரசின் இந்தச் செயல் நீதிமன்ற அவமதிப்பாகும். இருப்பினும், கேரள அரசைக் கண்டித்து தி.மு.க. அரசு ஒரு வார்த்தைக் கூட தெரிவிக்காதது தமிழக மக்களுக்குச் செய்யும் துரோகம் ஆகும்.

உறவை முறியுங்கள்…

முல்லைப் பெரியாறு அணைப் பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்குமாறு கேரள முதலமைச்சரை தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டுமென்றும், இல்லையெனில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டுமென்றும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை புறக்கணிக்கும் வகையில் செயல்படும் கேரள அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தி.மு.க. அரசு எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

உரிமையை காவு கொடுத்து, உறவைத் தொடர்வது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய அநீதி என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *