“அண்ணே கோயிலுக்கு போகலாமா என்று ஜெயக்குமாரைக் கேட்டான் ராஜா
“இல்ல நான் ஒரு வேலையா போறேன். எனக்கு வேலை இருக்கு; நீ கோயிலுக்கு போயிட்டு வா; அப்புறம் பேசலாம்” என்றார் ஜெயக்குமார்.
” செவ்வாய்க்கிழமை முருகன் கோயிலுக்கு போனா விசேஷமா இருக்கும்னு நினைக்கிறேன். அதான் சொன்னேன் “
“அது சரி தான். எனக்கு வேலை இருக்குன்னு சொன்னேன். இல்ல நான் வந்திருவேன். நீ கோயிலுக்கு போயிட்டு .சாமி கும்பிட்டு நல்லபடியா வா “என்று உத்தரவாதம் சொன்னார் ஜெயக்குமார்.
” நான் அப்போ கோயிலுக்கு போயிட்டு வந்து பேசுறேன்”
என்று சொன்ன ராஜா கோயிலுக்குப் போனான். செவ்வாய்க்கிழமை என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் சிறப்பு வழி, பொது வழி என்று இரண்டு வழிகள் இருந்தன.சிறப்பு வழியில் பணம் கொடுத்தால் கடவுளைப் பார்க்கலாம் என்று நியதியும் பணமும் இல்லாமல் இந்த வழி சென்றால் கடவுளைப் பார்க்கலாம் என்று இரண்டு வழியும் இருந்ததைப் பார்த்த ராஜா
” பணம் இல்லாமல் போகும் வழியைத் தேர்ந்தெடுத்தான். என்ன இது? காசு கொடுத்தா தான் கடவுளு கண்ணுக்கு தெரிவாரா ? கொடுமையா இருக்கு “
என்று பொது வழியில் சென்று கொண்டிருந்தான். அனேக மக்கள் அந்த வழியைத் தான் தேர்ந்தெடுத்தார்கள். .அவர்களுக்கு கூட அந்த கட்டண தரிசனம் கடுப்பைத் தான் தந்தது. இந்துக் கோயிலில் மட்டும்தான் இந்த மாதிரி பண வசூலிக்கிறது. சிறப்பு பூஜை, சிறப்பு மனிதர்கள் சிபாரிசுல கூட்டிட்டு போயி கருவறை பக்கத்துல உட்கார வைக்கிறது. இந்த மாதிரி சங்கடங்கள் எல்லாம் இந்து கோயில்ல மட்டும் தான் இருக்கு. மத்த எந்த கோயில்ல இது எல்லாம் இல்லை என்று வருத்தப்பட்டு கொண்டே சென்றான் ராஜா.
ஒரு வழியாக தான் எழுதிச் சென்ற ஒரு மன்னிப்புக் கடிதத்தை கடவுளின் சன்னதியில் போட்டுவிட்டு வெளியே வந்த போது அதுவரை அவனுக்குள் ஆழமாய் பதிந்திருந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வந்ததாக நினைத்தான். அப்படி செய்தால் நல்லது வரும் என்று சொன்ன அவன் நண்பனுக்கும் தகவலைச் சொன்னான்.
“நீ சொன்னது மாதிரியே என்னுடைய மன்னிப்புக் கடிதத்தை நான் போட்டுட்டேன்”
என்று சொல்ல இனிமேல் உங்களுக்கு வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று சொன்னான் நண்பன்.
” சரி “என்று கோயிலுக்கு போய்விட்டு அலுவலகம் சென்றான் ராஜா .அன்று மதியம் ஜெயக்குமார் போன் செய்திருந்தான்.
” என்னப்பா கோவிலுக்கு போயிட்டு வந்துட்டியா?
என்று கேட்க அங்கு நடந்த நிகழ்வுகள் எல்லாம் சொன்னான் ராஜா. கோயில்ன்னா அப்படித்தான் இருக்கும். அதுவும் இந்து கோயில்கள் ரொம்ப மோசம் “என்று அவரும் கோயில்களை நிர்வகிப்பவர்களை கடிந்து கொண்டாரே தவிர கடவுளை நிந்திக்கவில்லை .
“ஆனா ஒன்னு இன்னைக்கு நடந்துச்சு ராஜா”
என்றார் ஜெயக்குமார்.
” ஒருத்தர் என்கிட்ட பசிக்குதுன்னாரு .எனக்கு ஒரு மாதிரியா போச்சு. சரி வாங்க சாப்பிடலாம்னு கூட்டிட்டு போனேன். அவர் அங்கு சாப்பிட்டத பாத்துட்டு அங்க இருக்கிறவங்க எல்லாம் முழிச்சாங்க. என்ன இவரு இப்படி சாப்பிட்டார் ?அஞ்சு தடவைக்கு மேல சாப்பாடு வாங்கினாரு. ரெண்டு மீனு. ரெண்டு முட்டை ரெண்டு முட்டை ஆம்பிளேட்டுன்னு வாங்கி சாப்பிட்டாரு. எனக்கே ஒரு மாதிரியா இருந்தது. இந்த ஆளு எவ்வளவு பசியோடு இருந்தா இப்படிதான் சாப்பிடுவான்? “இவர் எவ்வளவு கேட்கிறாரோ அவ்வளவும் கொடுங்க; சாப்பிடட்டும்ன்னு கடைக்காரரிடம் சொன்னேன். சலிக்காம அவங்களும் குடுத்தாங்க. சாப்பிட்டுட்டு என்ன கையெடுத்து கும்பிட்டாரு இந்த மனுஷன். எனக்கு என்னமோ மாதிரி ஆயிடுச்சு. பரவால்ல விடுங்கன்னு சொல்லிட்டு ,என் கையில் இருந்த நூறு ரூபா அவர் கையில தினிச்சேன். மனுஷனுக்கு கண்ணுல கண்ணீர் பொங்கிடுச்சு”
என்று ஜெயக்குமார் சொல்ல ராஜாவிற்கு என்னவோ போலானது.
” அண்ணே நீங்க கோவிலுக்கு வந்திருந்தா கூட இத செஞ்சிருக்க முடியாது. நான் கோவிலுக்கு போனேன். அது என்னோட சுயநலம். ஆனா நீங்க கோயிலுக்கு வரல. ஒருத்தருக்கு உணவு வாங்கி கொடுத்து ,பசியாத்திருக்கீங்க. அவர் கையில செலவுக்கு காசும் கொடுத்து இருக்கீங்க. .இறைவன் யார் யாரை எங்கெங்க போகணும்னு அவன் தான் கட்டளையிடுறான். நீங்க அவருக்கு இன்னைக்கு நல்லது செய்யணும்னு இருந்திருக்கு. நான் கோவிலுக்கு போனேன். நீங்க கோயிலுக்கு வரல. ஆனா கோயிலுக்கு வந்ததை விட உங்களுக்கு ஆயிரம் மடங்கு புண்ணியம் கிடைச்சிருக்குன்னு நினைக்கிறேன்”
என்று ராஜா சொல்ல, எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார் ஜெயக்குமார்..
“அடுத்த வாரம் நிச்சயமா கோயிலுக்கு செல்லலாம் “என்று இருவரும் பேசினர். ஆனால் யாரை எங்கே போக
வைப்பார் ? என்பது இறைவனுக்குத் தான் வெளிச்சம்.