கதறி அழுத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, அக். 11–
முரசொலி செல்வம் உடலுக்கு திருமாவளவன், கீ.வீரமணி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அவரின் உடல் இன்று மாலை சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும் முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான ‘முரசொலி’ செல்வம் (83), பெங்களூரில் நேற்று காலமானார். பின்னர், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. முரசொலி செல்வத்தின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முரசொலி செல்வத்தின் உடல் மீது சிறிது நேரம் தலையை சாய்த்தபடி கதறி அழுது கண்ணீர் விட்டார். அதன் பின்னர் தனது சகோதரி செல்விக்கு ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன், சபாநாயகர் அப்பாவு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
முரசொலி செல்வத்தின் உடலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா, துணை செயலாளர் சுதீஷ், மதிமுக தலைமைக் கழக செயலாளர்
துரை வைகோ, கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் சார்பில் ஈ.ஆர். ஈஸ்வரன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியன், புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ., ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் வசீகரன், கவிஞர் வைரமுத்து, டைரக்டர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், பி.வாசு, நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார், வாகை சந்திரசேகர், விஜயகுமார், பார்த்தீபன், ராஜேஷ், பிரசாந்த், சிவாஜி கணேசனின் குடும்பத்தினர், பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, நடிகர் விக்ரம் மனைவி ஷைலஜா, நடிகைகள் ராதிகா, ஸ்ரீபிரியா, எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா, விஜிபி குழுமங்களின் தலைவர் வி.ஜி.சந்தோசம், வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் விஸ்வநாதன், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார், கவிஞர் மனுஷ்ய புத்திரன், முகசீரமைப்பு மற்றும் பல் மருத்துவர் பாலாஜி, பேராயர் வின்சென்ட் சின்னதுரை, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், முதலமைச்சரின் செயலாளர்கள், அரசு துறைச் செயலாளர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
முரசொலி செல்வத்தின் இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் நடக்கிறது.
முன்னாள் முதல்வரான கருணாநிதியின் சகோதரி மகனான செல்வம், திரைப்பட தயாரிப்புத் துறையிலும் முத்திரை பதித்தவர். மேகலா பிக்சர்ஸ், அஞ்சுகம் பிக்சர்ஸ், பூம்புகார் புரொடக்ஷன்ஸ் ஆகிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சகோதரி சண்முகசுந்தரம்மாளின் மகனான முரசொலி செல்வம், தனது மாமாவின் (கருணாநிதி) மகளான செல்வியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு எழிலரசி என்ற மகள் உள்ளார்.