மும்பை, நவ. 8–
மும்பையில் இருந்து லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் ‘திடீர்’ தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மும்பையில் இருந்து இன்று காலை 6.30 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. கடைசி நேரத்தில் விமானத்தில் ‘திடீர்’ தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. அதை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனால் லண்டனுக்கு செல்ல இருந்த விமானம் புறப்படுவதில் தாமதம் ஆனது. இதனால் 200க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
ஏர் இந்தியா விமான நிறுவனம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மும்பையிலிருந்து லண்டனுக்கு காலை 6.30 மணிக்கு புறப்படவிருந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாகி இன்னும் புறப்படவில்லை. பயணிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி நடக்கிறது. மதியம் 1 மணிக்கு விமானம் புறப்படும். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()





