செய்திகள்

மும்பை மருத்துவமனையில் பயங்கர தீ : 10 நோயாளிகள் கருகிச் சாவு

22 தீ அணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன

மும்பை, மார்ச். 26–

மும்பையின் பாண்டூப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்ட்ட பயங்கர தீ விபத்தில் 10 நோயாளிகள் கருகி பலியானார்கள். மேலும் பலர் தீக்காயம் அடைந்தனர். பிற்பகல் 12 மணி வரை எரிந்த நிலையில் 3 சடங்கள் எடுக்கப்பட்டன.

இது குறித்து காவல்துறை உதவி ஆணையர் பிரசாந்த் கடம் கூறுகையில், 22 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், போராடி தீயை அணைத்தனர். மிகப்பெரிய வணிகக் கட்டத்தின் மூன்றாவது மாடியில் இயங்கி வந்த இந்த மருத்துவமனையில் 76 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த தீ விபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்தனர் என்றார்.

அந்த வணிகக் கட்டடத்தின் முதல் தளத்தில் நள்ளிரவு 12.30 மணியளவில் தீப்பற்றியது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மும்பை மேயர் கிஷோரி பட்நேகர் கூறுகையில், முதல் முறையாக இப்போதுதான் ஒரு வணிக வளாகத்தில் மருத்துவமனை இயங்கி வருவதைக் கேள்விப்படுகிறேன். இது மிகவும் மோசமான நிலை. வென்டிலேட்டரில் ஏழு நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். 70 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

முறைப்படி தீத் தடுப்பு – பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமல் மருத்துவமனை இயங்கி வருவதாக தேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சஞ்சய் தீனா பாட்டீல் மும்பை மாநகராட்சியில் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *