மும்பை, நவ.24–
மும்பை நகரில் புதிதாக 30 பேருக்கு தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மும்பை நகரில் தட்டம்மை பாதிப்பு அதிக அளவில் பரவி வருகிறது. இதன்படி, புதிதாக 30 பேருக்கு தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 22 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.
மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் 156 பேருக்கு புதிதாக தட்டம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன என தகவல் தெரிவிக்கின்றது. இந்த ஆண்டில் இதுவரை மும்பையில் 233 பேருக்கு தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், 8 மாத ஆண் குழந்தை தட்டம்மைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்த நிலையில், மும்பையில் தொற்றுக்கான மொத்த உயிரிழப்பு 12 ஆக உயர்ந்து உள்ளது.
இந்த நிலையில் கேரளாவின் மலப்புரம், குஜராத்தின் ஆமதாபாத் மற்றும் ஜார்க்கண்டின் ராஞ்சி ஆகிய நகரங்களில் தட்டம்மை பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்களில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தகவல் வெளியானது. இந்த நிலையில், தொற்று அதிகரித்து உள்ள கேரளா, குஜராத் மற்றும் ஜார்க்கண்டில் மத்திய அரசு சார்பில் உயர்மட்ட குழுக்களை ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதில், ஜார்க்கண்டின் ராஞ்சி நகருக்கான மத்திய குழுவில், டெல்லியின் தேசிய நோய் கட்டுப்பாடு மையம் மற்றும் டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையின் நிபுணர்கள் இடம் பெற்று உள்ளனர்.