செய்திகள்

மும்பையில் ரூ.113.46-க்கு விற்பனையாகும் ஒரு லிட்டர் பெட்ரோல்

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றிமில்லை

புதுடெல்லி, அக்.25-

மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.113.46-க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றிமில்லை.

சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்-டீசலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.

கொரோனாவில் இருந்து உலக நாடுகள் படிப்படியாக மீண்டு வருவதால் கச்சா எண்ணெய்க்கான தேவை தற்போது ஏறுமுகமாக உள்ளது. பொது முடக்கங்கள் விலக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை சுமுக நிலைக்கு திரும்பி வருவதால் பெட்ரோல்–டீசலுக்கான பயன்பாடு அதிகரித்து வருகிறது.

ஆனால் கொரோனாவையொட்டி உற்பத்தியை குறைத்துக்கொண்ட எண்ணெய் உற்பத்தி நாடுகள், தற்போது தேவை அதிகரித்த போதும், எண்ணெய் உற்பத்தியை தேவைக்கு ஏற்ப அதிகரிக்கவில்லை.

இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பீப்பாய் ஒன்றுக்கு 85 டாலர் என்ற நிலையை கடந்த வாரம் எட்டியது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல்–டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும் பெட்ரோல், டீசல் மீது மத்திய – மாநில அரசுகள் அதிக அளவில் வரியும் விதித்து உள்ளன. இது பெட்ரோல்–டீசல் விலையை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்று வருகிறது.

இதன் காரணமாக பெட்ரோல் விலை நாட்டின் அனைத்து பெரிய நகரங்களிலும் ரூ.100ஐ கடந்து விட்டது. டீசல் விலையும் பல நகரங்களில் ரூ.100ஐ எட்டி விட்டது. பெட்ரோல்–டீசல் மீது மாநில அரசுகள் விதிக்கும் வரியின் அடிப்படையில் மாநிலத்துக்கு மாநிலம் இவற்றின் விலை மாறுபடுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 35 காசுகள் அதிகரித்தது. இதன் மூலம் அவற்றின் விலை நாடு முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது.

அந்தவகையில் நேற்று டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை ரூ.107.59 ஆக இருந்தது. மும்பையில் ரூ.113.46 ஆகவும், சென்னையில் ரூ.104.52, கொல்கத்தாவில் ரூ.108.11 ஆகவும் விற்கப்பட்டது.

இதைப்போல டீசல் விலை டெல்லியில் ரூ.96.32 ஆகவும், மும்பையில் ரூ.104.38 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.99.43 ஆகவும், சென்னையில் ரூ.100.59 ஆகவும் உச்சத்தில் இருந்தது.

இந்தியாவில் கடந்த மாதம் 28-ந் தேதிக்கு பின் 21 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ரூ.6.40 அதிகரித்து இருக்கிறது. டீசல் விலையும் செப்டம்பர் 24-ந் தேதிக்கு பின் 24 முறை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் ரூ.7.70 ஏற்றம் கண்டிருக்கிறது.

இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல்–டீசல் விலை வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. இது, அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் எழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெறுமாறு மத்திய அரசை பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலே அதாவது பெட்ரோல் ரூ.104.52ம், டீசலர் ரூ.100.59ம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *