மும்பை, அக்.6–
மும்பையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் உள்ள கட்டடத்தில் இன்று அதிகாலை 5.20 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. முதலில் கீழ் தளத்தில் இருந்த கடையில் மின்சார பெட்டியில் தீப்பிடித்து எரிய துவங்கியது. பின்னர் மளமளவென தீ பரவியது.
முதல் தளத்தில் வசித்து வந்த பிரேம் குப்தா, அவரின் மனைவி மஞ்சு பிரேம் குப்தா (வயது 30), அனிதா குப்தா (வயது 30), குழந்தைகள் நரேந்திர குப்தா (வயது 10) மற்றும் பாரிஸ் குப்தா (வயது 7), சேதிராம் குப்தா (வயது 15), கீதாதேவி தரம்தேவ் குப்தா (வயது 60) ஆகிய 7 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்த 7 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவற்றில் மற்றொரு குடும்பத்தின் உறுப்பினர்களான 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள் சிறிதுநேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.