மும்பையில் தாறுமாறாக ஓடிய
மாநகர பஸ்: சாலையோரம் நின்றவர்கள்
மீது மோதியதில் 7 பேர் பலி
–––––––
மும்பை, டிச. 10–
மும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகர மின்சார பஸ் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் 7 பேர் பலியானார்கள். 43 பேர் படுகாயமடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை குர்லா மேற்கில் உள்ள எஸ்ஜி பார்வே மார்க் பகுதியில் இருந்து அந்தேரிக்கு சென்று கொண்டிருந்த மாநகர பஸ் ஒன்று அன்ஜும் இ இஸ்லாம் பள்ளி அருகே திடீரென வாகனங்கள் மற்றும் சாலையோரம் நின்றவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அப்ரீன் ஷா (19), அனம் ஷேக் (20), சிவம் கஷ்யப் (18) மற்றும் கனீஷ் கத்ரி (55) உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 43 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தை தொடர்ந்து பஸ் டிரைவர் சஞ்சய் மோர் (50) கைது செய்யப்பட்டார். பஸ்சில் பிரேக் பிடிக்காததாலேயே விபத்து நடந்ததாக டிரைவர் தெரிவித்துள்ளார். ஆனால், பஸ் விபத்தை நேரில் பார்த்தவர்களோ டிரைவர் போதையில் இருந்தார். அவரால் பஸ்சை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள இயலவில்லை. அதனாலேயே விபத்து நடந்தது என்று தெரிவித்துள்ளனர். பஸ்சை ஆய்வு செய்த ஆய்வாளர் பரத் ஜாதவும் பிரேக் சரியாக இருப்பதாகவே முதல் கட்ட விசாரணையில் கூறியுள்ளார்.
அந்த பஸ் நேற்று இரவு 9.30 மணிக்கு குர்லாவில் இருந்து புறப்பட்டு அந்தேரி மேற்கு அகர்கர் சவுக்குக்கு சென்றது. இந்த நிலையில் தாறுமாறாக ஓடி 6 ஆட்டோக்கள், மற்றும் 10 மோட்டார் சைக்கிள்கள் மீது ஏறியது. இதில் ஒரு ஆட்டோ முற்றிலுமாக சேதமடைந்தது. போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தை நேரில் பார்த்த கபில் சிங் என்பவர் கூறுகையில், கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென சாலையோர வியாபாரிகள் மற்றும் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. அங்கிருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பது குறித்து தெரியாமல் அங்குமிங்கும் ஓடினார்கள். நான் ஏதோ தீவிரவாதிகள் தாக்குதலோ என்று நினைத்துவிட்டேன். அப்போது சிலர் அந்த பஸ்சின் பின்னால் ஓடிச் சென்று பஸ்சில் ஏறி பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினர். அதற்குள் போலீசார் அங்கு வந்துவிட்டனர் என்று தெரிவித்தார்.
அகமது என்பவர் கூறுகையில், நான் அப்போதுதான் வீட்டில் இருந்து ரெயில்வே ஸ்டேஷன் செல்வதற்காக வந்தேன். திடீரென அலறல் சத்தம் கேட்டது. அங்கு பார்த்தபோது பஸ் ஒன்று ஆட்டா, மோட்டார் சைக்கிள் மீது மோதி அங்கு நின்றிருந்த மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. நான் உடனடியாக ஓடிச் சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை காப்பாற்றி மற்றொரு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன் என்று தெரிவித்தார்.