செய்திகள்

மும்பையில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மும்பை, ஜூலை 19

மும்பையில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

மும்பையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த கன மழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. இதேபோல நவிமும்பை, தானே, பால்கர் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதேபோல சாலை, ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இடைவிடாமல் பெய்த மழை காரணமாக மும்பை நகரமே வௌ்ளக்காடாக மாறி உள்ளது.

இந்தநிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பலத்த மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள மும்பை மாநகராட்சி, நிர்வாகம் முழுவீச்சில் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் நேற்று பெய்த கன மழை காரணமாக பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. மரங்கள், மின் கம்பங்கள் சாலையில் முறிந்து விழுந்தன. கன மழை காரணமாக நகர் முழுவதும் இதுவரை 32 பேர் பலியாகி உள்ளனர். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இது சம்பந்தமாக உயர்மட்டக் குழுவை கூட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மீட்பு குழுவினரை பாதிப்பு ஏற்பட்ட இடங்களுக்கு அனுப்பி உள்ளார். அவர்கள் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கடும் மழை காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *