180 புள்ளிகள் உயர்ந்து 80,468.20 ஆக பதிவு
மும்பை, ஏப். 30–
மூன்றாவது நாளாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 180 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நடைபெற்றது.
உலகளாவிய சந்தை சாதகமாக இருந்ததால், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று தொடர்ந்து 3 வது நாளாக ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 180 புள்ளிகள் உயர்ந்து 80,468.20 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 39.65 புள்ளிகள் உயர்ந்து 24,375.60 ஆக இருந்தது.
எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம், ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்நுட்பப் பங்குகளில் அதிகப்படியான வாங்குதல் தொடர்ந்ததால் சந்தை ஏற்றம் நீடித்தது. பிஎஸ்இ சென்செக்ஸ் அதிகபட்சமாக 80,439.10 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 80,055.87 புள்ளிகளையும் தொட்டது. நிஃப்டி அதிகபட்சமாக 24,375.60 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 24,268.80 புள்ளிகளையும் பதிவு செய்தது.
சிறிய பங்குகள் குறைந்தது
நடுத்தர பங்குகளின் விலை 0.35 சதவீதம் உயர்ந்தது, அதே நேரத்தில் சிறிய பங்குகளின் விலை 0.23 சதவீதம் குறைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 பங்குகளில் 20 பங்குகள் ஏற்றம் கண்டன, 10 பங்குகள் சரிவை சந்தித்தன. ஏற்றம் கண்ட பங்குகளில் பவர் கிரிட் 1.83 சதவீதம் உயர்ந்து ரூ.308.80 ஆகவும், ஹெச்டிஎஃப்சி வங்கி 1.37 சதவீதம் உயர்ந்து ரூ.1934.30 ஆகவும், சன் பார்மா 1.12 சதவீதம் உயர்ந்து ரூ.1825.10 ஆகவும், என்டிபிசி 0.85 சதவீதம் உயர்ந்து ரூ.360.30 ஆகவும் இருந்தன.
சரிவை சந்தித்த பங்குகளில் பஜாஜ் ஃபின்சர்வ் 5.89 சதவீதம் குறைந்து ரூ.1,943.45 ஆகவும், பஜாஜ் ஃபைனான்ஸ் 4.42 சதவீதம் குறைந்து ரூ.8,686.85 ஆகவும், டாடா மோட்டார்ஸ் 2.25 சதவீதம் குறைந்து ரூ.650.65 ஆகவும், எஸ்பிஐ 1.35 சதவீதம் குறைந்து ரூ.800.80 ஆகவும் இருந்தன. அமெரிக்க பங்குச் சந்தை, ஐரோப்பிய பங்குச் சந்தை மற்றும் ஆசிய பங்குச் சந்தைகள் இன்று வலுவாகவே காணப்பட்டன.