சிறுகதை

முன் இருக்கை… ராஜா செல்லமுத்து

“நேர்மைக்கு
நெறி முறைகள்
ஏதும் கிடையாது…”
நகரின் பிரதான சாலையில் இருந்த விழா மண்டபம் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.
வாசலில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள், வரும் சிறப்பு விருந்தினர் களை சிறப்பாக வரவேற்று, சிறப்பான வாசகங்களை எழுதி வைத்திருந்தது.
விழா மண்டபத்தின் வாசலில் இரண்டு அழகான பெண்கள் வரவேற்று நின்றிருந்தனர். அவர்கள் சேலைக் கட்டும் உதட்டுச் சாயமும் விழா ஆட்களிலிருந்து அவர்களைப் பிரித்துக் காட்டியது.
வரும் விருந்தினர்களின் மீது அவர்கள் பன்னீர் தெளித்து, புன்னகைப் பூவைத் தொடுத்து வெல்கம் வெல்கம்; வாங்க வாங்க என்று இரண்டு கைகளையும் நெஞ்சுக்கு நேரே உயர்த்தி வரும் ஆட்களை எல்லாம் உபசரித்து வரவேற்றனர். வந்தவர்கள் அழகுப் பெண்களை ஒருமாதிரியாகப் பார்த்துக் கொண்டே அவர்களின் மென்மைக் கன்னங்களை வருடுவதாக நினைத்துக் கொண்டு, சந்தனக் கும்பாவிலிருந்து சந்தனத்தை ஒரு கையில் பரபரவெனத் தேய்த்துக் கொண்டனர். அவர்கள் அப்படித் தேய்க்கும் போது, சந்தனத்தை விட, அவர்களின் சொள்ளுப்புன்னைகை ஜோராக மணம் வீசியது.
“சார், கற்கண்டு, என்று வைரப்பற்கள் தெரிய ஒருத்தி சொல்ல,
“ஈஈஈஈ” என்று முப்பத்திரண்டு பற்களும் முன்னுக்கு வர, பளிச்சென சிரித்துக் கொண்டே கற்கண்டையும் ரோஜாப்பூவையும் எடுத்துக் கொண்டு விழா மண்டபத்திற்குள் நுழைந்தனர்.
சில நபர்கள். ஆங்காங்கே, உட்கார்ந்திருதனர் ஆட்கள், மெல்லிய இசையுடன் மெல்லிய வெளிச்சமும் அரங்கத்தை அழகாக வைத்திருந்தது.
“சார் இங்க உட்காரலாமா? என்று சன்னக் குரலில் ஒருவர் கேட்க
இல்லங்க. இது விஜபி சீட்ஸ். முதல் அஞ்சு வரிசை விட்டுட்டு மத்த சீட்டுல தாராளமா ஒக்காருங்க.
“ஏன் சார்?’’
“விஜபிகள் வாராங்க”
“ஓ” அப்பிடியா? என்றவர் ஐந்து வரிசை சீட்டுகளை விட்டே தள்ளியே உட்கார்ந்தார்.
விழாவுக்கு வந்தவர்கள் முதல் அஞ்சு முன்னிருக்கைகளை விட்டே உட்கார்ந்தனர். சீட்டின் மேலே Paper VIP Reseoved என்ற எழுதி ஒட்டியிருந்தனர்.
இதைப்பார்த்தவர்கள் அந்த சீட்டுக்களை விட்டு விட்டே சென்றனர்.
விழா நெருங்க நெருங்க ஆட்களின் வரத்து அதிகமானது. ஆனால் ஒருவர் கூட முன் அஞ்சு வரிசைச் சீட்டில் உட்காரவே இல்லை.
“யாருங்க விஐபி யாரையும் காணோம். ஆளுக வாராங்க.
வாராங்கன்னு தான் சொல்லிட்டு இருக்காங்களேயொழிய ஒரு ஆளும் வரக் காணாமே . இவ்வளவு சீட்டுகள் வேஸ்ட்டா கெடக்கே என்று முணுமுணுத்தவர்கள் எதுவும் பேசாமல் இருந்தனர்.
விழா ஆரம்பமானது. விஐபி வருகை ஆரம்பமானது . விஐபி சீட்டுகளுக்கு ஒரு சில ஆட்கள் மட்டுமே வந்தனர்.
பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன.
கச கசவென்று பேசிக்கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும் இருந்த சின்னக் குழந்தைகளை உஷ் பேசக்கூடாது. பேசாம இருங்க என்று பெரியவர் அரற்ற நிறையச் சத்தம் போட்டுக் கொண்டிருந்த குழந்தைகள், குறைந்த சத்தத்திற்கு வந்தனர்.
சார், முன்னால சீட்டு நிறையா இருக்கே. போய் ஒக்காரலாமா? என்று ஒருவர் கேட்க
ம்ஹூகும், அதெல்லாம் விஐபி சீட்டுகளாம் என்றார் கேட்டவர்.
“அதான் ஆளுக வரலையே”
வேணாங்க…. எனக்கு என்னமோ மாதிரி இருக்கு. நீங்க வேணா போயி உட்காருங்க என்றவர் முன் இருக்கைகளுக்கு போகவே இல்லை.
ஆனால் அப்படியும் இப்படியும் ஓடிக் கொண்டிருந்த குழந்தைகள் விஐபி சீட்டுகளில் போய் உட்கார்ந்தனர். விஐபிகள் என்று சொல்லிக் கொண்டு முன் வரிசையில் உட்கார்ந்தவர்கள் குழந்தைகளைப் பார்தது எதுவும் பேசவில்லை.
அப்படி உட்கார்ந்த குழந்தைகளுக்கு இது விஐபி சீட்டுகள் என்றோ? இது பெரியவர்கள் உட்காருவது என்றோ தெரியாது அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் இந்த சீட்டுகள் காலியாக இருக்கு அவ்வளவு தான்.
இதைப் பார்த்தவர்கள் நமக்கெல்லாம்
குழந்தை மனசு வேண்டும்பா. அவங்கள பாத்தீங்களா எந்த விதி நெறிமுறை (Protocol)யும் இல்லாம உட்கார்ந்திட்டு இருக்காங்க. இது தாங்க சமமான நிலை என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே விழா
ஆரம்பமானது .
குழந்தைகள் அமர்த்திக்கும் சீட்டின் மேலே விஐபி Reserved என்று எழுதியிருந்தது.
விஐபிகளுடன் குழந்தைகளும் முன் இருக்கையிலேயே அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *