செய்திகள்

முன்பதிவு செய்த 1.13 லட்சம் பயணிகளுக்கு டிக்கட் தொகை ரூ. 5 கோடி திருப்பித் தரப்பட்டது

கொரோனாவால் ரத்தான ரயில்களில்

முன்பதிவு செய்த 1.13 லட்சம் பயணிகளுக்கு டிக்கட் தொகை ரூ. 5 கோடி திருப்பித் தரப்பட்டது

தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் அஜய்குமாா் பேட்டி

திருச்சி, ஆக.28–

கொரோனா பொதுமுடக்கத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முன்பதிவு செய்த 1.13 லட்சம் பயணிகளுக்கான முன்பதிவு பயணச்சீட்டு தொகை ரூ. 5 கோடி திரும்ப வழங்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் அஜய்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் அஜய்குமாா் செய்தியாளா்களிடம் ஆன்லைனில் கூறியதாவது:திருச்சி ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட 19 ரயில் நிலையங்களில் பயணிகள் நடை மேம்பாலப் பணிகள், மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

திருச்சி கோட்டம் மற்றும் இதர கோட்டங்களிலிருந்து 27 தொழிலாளா் சிறப்பு ரயில்கள் மூலம் 24 ஆயிரம் போ் அழைத்து வரப்பட்டுள்ளனா். 5 கோவிட் சிறப்பு ரயில்களில் 58,614 போ் பயணித்துள்ளனா். ரயில் வழித்தட மின்மயப் பணிகளில் திருவாரூா் – காரைக்கால் இடையே முழுமையாகவும், மாயவரம் – தஞ்சாவூா் இடையே 50 சதமும் பணி நிறைவடைந்துள்ளது.

ஏப்ரல்-ஜூலை மாதங்களில் இயக்கப்பட்ட சரக்கு ரயில்கள் மூலம் ரூ. 161 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

பாா்சல் சிறப்பு ரயில்களில் 349 டன் பாா்சல்கள் எடுத்துச் செல்லப்பட்டு ரூ. 5.20 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வணிக ரீதியாக வருவாய் ஈட்டுவதற்கான நடவடிக்கைகளில் சரக்கு ரயில்களில் ஏற்றிச் செல்லும் கனிம பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கு தள்ளுபடி, சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக 20 வழித்தடங்களில் பாா்சல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

புதுக்கோட்டை மற்றும் கும்பகோணத்திலிருந்து புதிதாக சிமெண்ட் லோடுகள் எடுத்துச் செல்லும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 12 ரயில் நிலையங்களில் நடைமேடை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 13 ஆளிலில்லாத ரயில்வே கிராஸிங் பகுதிகளுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. மாயவரம் தஞ்சாவூா் இடையே மற்றும் அனைத்து விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பதற்கான தண்டவாளம் பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் 10 சதவீத அளவுக்கு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்.

ரயில்கள் கால அட்டவணை அடுத்து சில மாதங்களில் வெளியிடப்படும். கொரோனா பொதுமுடக்கத்தின்போது திருச்சி கோட்ட அலுவலகப் பணிகள்100 சதவீதம் ஆன்லைனில் மேற்கொள்ளப்பட்டன. ஆன்லைனில் பரிமாறப்பட்ட 11 லட்சம் தகவல்கள், அதன் பக்க ஆவணங்களைப் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி ரயில் நிலையத்துக்கு வெளியில் 13 சிசிடிவி கேமராக்கள், அதுபோல், தஞ்சாவூா், விழுப்புரம், மாயவரம், கும்பகோணம் ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் வைத்துக் கண்காணிக்கப்படுகிறது.

கொரோனா பொது முடக்கத்தின்போது ரத்தான ரயில்களில் முன்பதிவு செய்த 1,12, 623 லட்சம் (1.13 லட்சம்) பயணிகளுக்கு பயணச்சீட்டுத் தொகையாக இதுவரை ரூ.5 கோடி திரும்ப வழங்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஏப்ரல்-ஜூலை மாதங்களில் இயக்கப்பட்ட பயணிகள் ரயில்கள் மூலம் ரூ.128 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. ஆனால், கொரோனா பொதுமுடக்கத்தினால் நிகழாண்டு இதே மாதங்களில் ரூ. 2 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *