சிறுகதை

முன்பதிவுக்குப் பின்னால் – ராஜா செல்லமுத்து

ஒரு பெரிய நிறுவனத்தில் பணியில் சேர்வதற்காக விண்ணப்பித்திருந்தான் சென்றாயன். அது ஒரு மல்டி நேஷனல் கம்பெனி. அதில் வேலை செய்தால் நிச்சயம் கை நிறைய சம்பாதிக்கலாம். சமூகத்தில் நல்ல பெயர் இருக்கும் என்று நினைத்தான்.

அதற்குத் தான் அந்த நிறுவனத்திற்கு விண்ணப்பித்திருந்தான் சென்றாயன்.

விண்ணப்பித்து விட்டு பதில் ஏதும் வராததால் அடிக்கடி அந்த கம்பெனிக்குப் போய் விசாரிப்பதும் எப்பொழுது ஆட்கள் எடுக்கிறார்கள் என்று கேட்பதுமாய் இருப்பான்.

அந்த அலுவலகத்தில் இருக்கும் ஆட்கள் கூடுமானவரை நல்ல பதில் சொல்லி அனுப்பிக் கொண்டிருப்பார்கள் . அந்த பதிலைச் சுமந்து கொண்டு வரும் சென்றாயன் எப்படியும் தனக்கு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் தூங்குவான். நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லோரிடமும் அந்தக் கம்பெனியில் எனக்கு வேலை கிடைத்துவிடும். நல்ல வாழ்க்கை அமையும் என்று சொல்லிக் கொண்டிருப்பான்.

ஒரு சிலர் இதைக் கேட்டு பொறாமைப்படுவார்கள். ஒரு சிலர் இதைக் கேட்டு சந்தோஷப்படுவார்கள்.

இப்படியாகப் போய் கொண்டிருக்கும் ஒரு நாள் அந்தக் கம்பெனியிலிருந்து சென்றாயனுக்கு போன் வந்தது.

இது சென்றாயனா? என்று கேட்டார் ஒருவர்.

ஆமா என்று பதில் சொன்னான் சென்றாயன்.

நாளைக்கு உங்களுக்கு பதினோரு மணிக்கு கம்பெனியில் அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு. நீங்க வாங்க என்று சொல்லிவிட்டு மறுபேச்சு பேசாமல் தொலைபேசித் தொடர்பைத் துண்டித்தார் அந்த அலுவலக ஊழியர்.

தலை கால் புரியாத சந்தோசத்தில் தள்ளாடினான் சென்றாயன். எப்படியும் தனக்கு அந்த வேலை கிடைத்துவிடும். திருமணம் செய்து கொள்ளலாம். நல்ல வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கலாம் என்று நினைத்துக் கொண்டு அந்த இரவு முழுவதும் தூங்காமல் இருந்தான். சந்தோஷம் தலை முட்டியதால் தூக்கம் தொலைத்து இருந்தான்.

விடிந்தும் விடியாமல் எழுந்தவன் கிளம்பி அலுவலகம் சென்றான். அங்கு நிறைய பேர் இன்டர்வியூக்காக வந்திருந்தார்கள்.

என்னது இவ்வளவு பேரா ? இவ்வளவு பேர்ல நமக்கு வேலை கிடைக்குமா? என்று தனக்குத் தானே பேசிக் கொண்டான். அப்போது ஒவ்வொரு ஆளாக இன்டர்வியூ செய்யப்பட்டு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். சென்றாயனுக்கு முன்னால் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

அப்போது இன்டர்வியூ செய்பவர்களுக்கும் முன்னால் சென்றவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் அந்த நபர் அந்த நிறுவனத்தைப் பற்றியும் இன்டர்வியூ பற்றியும் தவறான வார்த்தைகளைப் பேசினார். இதனால் கோபமடைந்த அந்த அலுவலக ஊழியர்கள் அந்த நபரோடு இன்டர்வியூ செய்வதை நிறுத்தினார்கள்.

இனிமேல் யாரையும் இன்டர்வியூ செய்யப்போவதில்லை. எல்லோரும் அலுவலகத்தை விட்டுக் காலி செய்யுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டனர்.

ஆயிரம் கனவுகளைச் சுமந்து கொண்டு அமர்ந்திருந்த சென்றாயன் தலையிலும் அவனுக்கு முன்னால் சென்றவன், எல்லோர் தலைகளிலும் பெரிய கல்லைத் தூக்கிப் போட்டுச் சென்றுவிட்டான்.

‘அடப்பாவி…. உனக்கு முன்னால போனவங்க எப்படி பேசினாங்க? நீ எப்படி பேசினே? உன்னால மத்தவங்களோட வாழ்க்கை கெட்டுப் போச்சு. அதை யோசிச்சியா?’ என்றவனைக் கேள்வி கேட்டபோது…..

‘பாஸ் இதெல்லாம் பெரிய விஷயமா ? வேற கம்பெனி பாருங்க’ என்று ரொம்ப சாதாரணமாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.

சென்றாயன் அந்த அலுவலக ஊழியர்களிடம் ‘அடுத்து எப்போது இன்டர்வியூ?’ என்று கேட்டதற்கு…..

‘தெரியாது’ என்று சொல்ல…. பதறினான்.

ஆயிரம் கனவுகளோடு சென்றவனுக்கு அவனது இருதயம் இரண்டாக உடைந்து வெளியே வந்தான். தனக்கு முன்னால் சென்றவனுக்கு முன்னால் தான் சென்றிருந்தால் தனக்கு வேலை கிடைத்திருக்கும். அவனுக்கு பின்னால் சென்றது தான் நாம் தவறு என்று உணர்ந்தான் சென்றாயன்.

எப்போதும் நமக்கு முன்னால் இருப்பவர்கள், நமக்கு முன்னால் செல்பவர்கள் எப்படி பேசிக் கொள்கிறார்கள். எப்படி நடந்து கொள்கிறார்கள் இதெல்லாம் அவனுக்குப் பின்னால் இருப்பவர்களின் வாழ்க்கை அடங்கி இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்து கொள்வதில்லை.

அந்த அலுவலகத்தில் இருந்து தன்னை அழைப்பார்கள் என்று காத்துக் கொண்டிருந்தான் சென்றாயன்.

எவனோ ஒருவன் செய்த குற்றத்திற்காக அவன் மட்டுமல்ல நிறையப் பேர் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *