சிறுகதை

முன்னாள் ராணுவ வீரர் – ராஜா செல்லமுத்து

15 வருடங்களுக்கு மேல் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராசுக்கு சொந்த கிராமத்திற்கு வந்தது பிடிக்கவில்லை .

ராணுவத்தில் இருந்தபோது எதிரிநாட்டை விரட்டுவதற்கு துப்பாக்கி ஏந்தியும் தாய் நாட்டைக் காப்பதற்காக கண்ணும் கருத்துமாக ஊண் உறக்கம் இல்லாமலும் கடமையே கண்ணாக இருந்த ராசு கிராமத்திற்கு வந்ததிலிருந்து வேலை வெட்டி இல்லாமல் சும்மா இருந்தார்.

அவரை சுற்றியுள்ள நண்பர்கள் எல்லாம் ஏதேதோ காட்டு வேலை, தோட்டத்து வேலை, விவசாய வேலைகள் என்று செய்து கொண்டிருந்த போது ராசுவுக்கு நாட்டைப் பற்றிய கவலை மட்டுமே இருந்தது .

ராசு உன்ன மாதிரி எல்லாம் ஓய்வு பெற்ற மிலிடரி காரங்க ஏடிஎம்ல பேங்க்ல ,பெரிய பெரிய அப்பார்ட்மெண்ட்ல வாட்ச்மேனா வேலைன்னு பாத்துட்டு இருக்காங்க. அப்படி நீ போனா சம்பளமும் கிடைக்கும்; பொழுதும் போனது மாதிரி இருக்கும் இல்ல என்று நண்பர்கள் கேட்டபோது கண்கள் இரண்டும் சிவந்து போக கோபம் கொண்டார் ராசு.

ஏண்டா நெஞ்ச நிமித்திக்கிட்டு துப்பாக்கிய தூக்கி எதிரி நாட்டுக்காரன் கூட சண்டை போட்டு வந்த நானா போய் வாட்ச்மேன் வேலைக்கு போறது.

அந்த வேலைக்கு நான் போக மாட்டேன். நாட்டுக்காக உழைத்த இந்த உடம்பையும் என் மனசையும் கடைசி வரைக்கும் நாட்டுக்காக தான் வச்சிருப்பேன். எனக்கு இந்த வாட்ச்மேன் வேலை எல்லாம் சரிப்பட்டு வராது என்றார் ராசு.

அப்புறம் என்னதான் பண்ணப் போறவ என்று ராசு வயதை ஒட்டிய நண்பர்கள் கேட்டார்கள்.

நான் சொல்றேன் அப்புறமா பாரு என்றார் ராசு.

அவரை மாதிரியே அந்தக் கிராமத்தில் இருந்த அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் என்று ராசுவை போல ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற ஆட்களை எல்லாம் ஒன்றாக திரட்டினார் ராசு.

சில பேர் வாட்ச்மேன் வேலையில் இருந்தார்கள். சில பேர் வேறு வேலையில் ஈடப்பட்டு இருந்தார்கள்.

நீங்க என்ன வேலை செஞ்சாலும் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. எனக்கு ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதும் இந்த வாட்ச்மேன் வேலைக்கு எல்லாம் போக முடியாது; அப்படின்னு மனசு சொல்லுச்சு. நான் போகல. அதுக்காக நீங்க செய்ற வேலையை நான் வேணாம்னு சொல்ல மாட்டேன் . ஆனா நாம ஒரு உறுதி எடுக்கணும். நாம மிலிட்டரில இருக்கும்போது எவ்வளவு எதிரிகளைச் சந்தித்து இருக்கம். எவ்வளவு தினவோட வாழ்ந்து இருக்கம். ஆனா இங்க சராசரி மனிதர்கள் எல்லாம் ஏதோ தவறு செஞ்சுட்டு இருக்காங்க. இவங்கள தட்டிக் கேட்க ஆள் இல்ல. அரசியல்வாதி, ரவுடி, பணம் வச்சிருக்கவன் தப்பு செஞ்சா வெளிய வந்துடறாங்க . அதுக்கு வக்கீல் ,கோர்ட், எல்லாம் பணத்துக்கு சாதகமாத்தான் தீர்ப்பு சொல்றாங்க . அதனால உண்மையான ஆளுகளுக்கு நீதி கிடைக்கிறதா? இல்ல. தப்பான ஆளுகளுக்கு தான் நீதி கிடைக்கிது. தப்பும் பண்ணிட்டு அதில இருந்து தப்பிச்சுக்கறாங்க. அதை ஒழுங்குபடுத்தணும் .இந்த நாட்டையே காப்பாத்துன நாம இந்த ஊர்ல இருக்கிற தவற பார்த்துட்டு சும்மா இருக்க முடியல .

வர்ற கோபத்துக்கு தப்புச் செய்றவன் எல்லாத்தையும் தட்டி கேட்கணுமின்னு கோபம் வருது. ஆனா ஏதோ ஒன்னு தடுத்து நிறுத்துது. நம்ம கண்ணுக்கு யாரு தப்பு பண்றாங்க. அப்படி தப்பு பண்றவங்கள இந்த அரசாங்கமும் இந்த காவல்துறையும் இந்த நீதிமன்றமும் ஏன் தப்பிக்க விட்டுருது. அவங்கள பிடிச்சு தூக்குங்க; உரிய தண்டனை கொடுத்தா மக்களை மண்ணைக் காப்பாத்தலாம் என்றார் ராசு .

அவர் பேசுவது வரையில் செவிமடுத்து கேட்டுக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற ராணுவத்தினர்கள் ,இப்போது மெல்ல நிமிர்ந்து அமர்ந்தார்கள்.

ராசு நாம அப்படி செய்றது தப்பு இல்லையா? என்று ஓய்வு பெற்ற ஒரு வயதான ராணுவ வீரர் கேட்டார்.

தப்பில்லையே தப்பான ஆளுகள தான நாம தூக்குறோம். அவன் தப்புப் பண்ணினான்னு தெரிஞ்சுச்சுனா அவன் இவனை யெல்லாம் பாத்து பைசா கொடுத்து அந்தக் குற்றத்திலிருந்து வெளியே வந்துடுறான்.

பணம் வாங்கிட்டு தீர்ப்பு சொன்னவர் தப்பா வழக்காடுனவர் இதைப்பற்றி எதுவும் நினைக்கிறது இல்ல. தப்பு செய்றவன்; செஞ்சவன் பணம் கொடுத்தா எதை வேணாலும் செய்யலாம்னு அடுத்தடுத்து தப்பு செய்றாங்க.

அதனால நாம ஒரு முடிவு எடுப்போம். அதன்படி செயல்படுவாேம். இதுதான் நாம உண்மையா பாரத மாதாவுக்கு செய்ற பிரதிபலன் என்று ராசு சொன்னபோது

மறுநாள் காலை அந்தக் கிராமத்திலிருந்து சில பேர் காணாமல் போயிருந்தார்கள். எங்கெங்கோ தேடிப் பார்த்த உறவினர்கள் காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து தருவதற்காக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள்.

ராசுவும் அவருடன் ஓய்வு பெற்ற ராணுவத்தினர்களும் அவர்களுக்கு என்று அமைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற ராணுவத்தினர்கள் சங்கத்தில் ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள் .

காணாமல் போன நபர்களின் உறவினர்களும் காவல்துறையும் காணாமல் பாேனவர்களைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

அடுத்து யார் என்று ஓய்வு பெற்ற ராணுவத்தினர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *