செய்திகள்

முன்னாள் முதல்வர் சித்தராமையா, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்பட 61 பேருக்கு இந்து அமைப்பு கொலை மிரட்டல்

பெங்களூர், மே 14–

இந்துக்களிடம் மன்னிப்பு கோராவிட்டால் இறந்து போக தயாராக இருங்கள் எனக்கூறி கன்னட எழுத்தாளர் வீரபத்ரப்பாவுக்கு அனுப்பப்பட்ட 2 வது மிரட்டல் கடிதத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் உள்பட 61 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

கர்நாடகத்தில் தொடர்ச்சியாக மதம்சார்ந்த பிரச்சனைகள் வெடித்து வருகின்றன. ஹிஜாப் தடை, கோவில்களில் முஸ்லிம் வியாபாரிகள் கடைகள் அமைக்க அனுமதி மறுப்பு, ஹலால் உணவு பிரச்சனை, அனைத்து இடங்களிலும் முஸ்லிம் வியாபாரிகளை புறக்கணிக்க வேண்டும் என்பன போன்ற பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம், எழுத்தாளர்கள், சில மடாதிபதிகள், நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ஆளும் பாஜக அரசும் வெறுப்புணர்வு தூண்டும் வகையில் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தன.

கொலை மிரட்டல் கடிதம்

இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு கன்னட எழுத்தாளர் வீரபத்ரப்பாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு கடிதம் ஒன்று வந்தது. சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் இருந்து வந்த 2 பக்க கடிதத்தில் எழுத்தாளர்கள் உள்பட 61 பேரின் இடம்பெற்றுள்ளன. முன்னாள் முதல்வர்களான காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா, மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் குமாரசாமி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.

“சாஹிஷ்ணு இந்து” என் பெயரில் அனுப்பப்பட்ட இந்த கடிதத்தில் பெயர், விலாசங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதுபற்றி எழுத்தாளர் வீரபத்ரப்பா போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மிரட்டல் விடுத்த நபர் இன்னும் போலீசில் சிக்கவில்லை.

2 வது கடிதம்

இந்நிலையில் தான் எழுத்தாளர் வீரபத்ரப்பாவுக்கு 2வது முறையாக கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விஜயநகர் மாவட்டம் கொட்டூர் விலாசத்துக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதம் சித்ரதுர்காவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. 6 பக்கங்கள் கொண்ட இந்த கடிதமானது கன்னட மொழியில் எழுதப்பட்டுள்ளது.

இதில் வீரபத்ரப்பா உள்பட 20 எழுத்தாளர்கள், மடாதிபதிகள், அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக முன்னாள் முதல்வர்களான சித்தராமையா, குமாரசாமி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், மடாதிபதி நிஜகுன்னானந்தா சுவாமி, நிடுமாமிடி வீரபத்ர சென்னமல்லா சுவாமி, எழுத்தாளர் பரகூர் ராமசந்திரப்பா, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்பட 61 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

கடிதத்தில், ‘நீங்கள் அனைவரும் இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்துக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் இறந்து போவதற்கு தயாராக இருங்கள். நாங்கள் வெறும் காகித புலிகள் அல்ல. சொல்வதை செய்தும் காட்டுவோம்” என மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றியும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.