புது டெல்லி, டிச. 27-
முன்னாள் பிரதமரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு காலமானார். இவருக்கு வயது 92.
சிறந்த பொருளாதார நிபுணரும், அரசியல்வாதியுமான மன்மோகன் சிங், கடந்த சில மாதங்களாகவே உடல்நல பிரச்னைகளை எதிர்கொண்டு வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததனால் வியாழக்கிழமை மாலை மருத்துவமனையில் அவசரமாக சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அரசியல் வாழ்க்கை
மன்மோகன் சிங், 2004 முதல் 2014 வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசின் கீழ் பிரதமரானார். இந்தியாவின் 13வது பிரதமராக, தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்த அவர், சீக்கிய சமுதாயத்திலிருந்து வந்த முதல் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது அரசியல் பயணம் மட்டுமல்லாமல் பொருளாதார நிபுணராக அவர் வகித்த பங்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு அடையாளமாக இருந்தது.
இந்திய பொருளாதாரத்தின் சிற்பி
1991ஆம் ஆண்டு பிவி நரசிம்மராவ் அமைச்சரகத்தில் நிதி அமைச்சராக பணியாற்றிய மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையை உருவாக்கினார். அந்நியச் செயலரக்குக் குறைவால் சிரமப்பட்ட நாடு, அவரின் தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் கொள்கைகளால் புதிய பாதையில் முன்னேறியது.
இந்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் இந்தியாவை உலகின் வேகமாக வளர்ந்த பொருளாதாரங்களின் வரிசையில் சேர்த்தன. அவரின் சீர்திருத்தக் கொள்கைகள் இந்தியாவின் பொருளாதார அடித்தளத்தை உறுதியாக அமைத்தன.
கடைசி பொது நிகழ்வு:
2024ஆம் ஆண்டு ஜனவரியில் அவரது மகளின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டதே மன்மோகன் சிங்கின் கடைசி பொது நிகழ்வாகும்.
முன்னாள் பிரதமரின் மறைவுக்கு நாடு முழுவதிலிருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அவரின் செயல்திறன், சிந்தனைகள், மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புகள் என்றென்றும் நினைவில் இருக்கும்.