செய்திகள்

முன்னாள் படைவீரர்களுக்கும் வீட்டுவரிச் சலுகை திட்டம் விரிவாக்கம்: அரசாணை வெளியீடு

சென்னை, மார்ச் 15–-

முன்னாள் படைவீரர்களுக்கும் வீட்டுவரிச் சலுகை திட்டத்தை விரிவாக்கம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-–

தமிழக சட்டசபையில் 19.2.2024 அன்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பட்ஜெட் உரையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், வீட்டுவரித் தொகையை மீளப்பெறும் சலுகை தற்போது போர் விதவைகள், குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்களின் விதவைகள், பராமரிப்பு மானியம் பெறும் போரில் ஊனமுற்ற படைவீரர்கள், வீரவிருதுகள் பெற்ற முன்னாள் படை வீரர்கள் போன்ற சில பிரிவினருக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

வரும் நிதியாண்டில் இருந்து குடியிருப்புகள், சொத்துவரி, வீட்டுவரித் தொகையை மீளப்பெறும் இந்ததிட்டத்தை அனைத்து முன்னாள் படைவீரர்களுக்கும் நீட்டிப்பு செய்து ஆணையிடப்படுகிறது. இதனால் 1.20 லட்சம் முன்னாள் படைவீரர்கள் பயனடைவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 1.25 லட்சம் முன்னாள் படைவீரர்கள் உள்ளனர். 31.8.2023 தேதிப்படி 16 ஆயிரத்து 806 முன்னாள் படைவீரர்கள் ரூ.2.29 கோடி வீட்டுவரி செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், நிபந்தனைகளுக்கு உட்பட்ட தகுதியுடைய முன்னாள் படைவீரர்களுக்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் படைவீரர் நல இயக்குனர் கருத்துரு அனுப்பியுள்ளார்.

அந்த நிபந்தனைகளின்படி, அந்த முன்னாள் படைவீரர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியிருக்க வேண்டும். அவரது சொந்த வீட்டிற்கு, அவரது சொந்த பயன்பாட்டில் உள்ள குடியிருப்பாக பயன்படுத்தப்படும் கட்டிடத்திற்கு மட்டும் சலுகை வழங்கப்படும்.

வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது. ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, மறுவேலை வாய்ப்பு முறையில், தமிழக அரசுத் துறைகள், மத்திய அரசுப் பணிகள், மத்திய மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவராக மற்றும் ஓய்வூதியம் பெறுபவராக இருக்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *