புதுடெல்லி, பிப்.1–
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 79.
மூளை அறுவை சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நவீன் சாவ்லா அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். இன்று மாலை 5 மணிக்கு டெல்லி கிரீன் பார்க் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லாவின் மறைவு குறித்து அறிந்து வருத்தினேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” குறிப்பிட்டுள்ளார்.
1969-ம் ஆண்டு இந்திய நிர்வாகப் பணியில் சேர்ந்த நவீன் சாவ்லா, தனது பணிக்காலத்தில் டெல்லி, கோவா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு அரசாங்கங்களிலும், தொழிலாளர், உள்துறை மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகங்களிலும் பணியாற்றி உள்ளார். 2005ம் ஆண்டு அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 2009ல் அவர் 16வது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார். ஜூலை 2010 வரை தலைமை தேர்தல் ஆணையராகவும் இருந்தார். தனது பதவிக் காலத்தில் ஏப்ரல் – மே 2009ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.