போஸ்டர் செய்தி

முன்னாள் சி.பி.ஐ.இயக்குனர் அலோக் வர்மாவின் புகாரை 10 நாளில் விசாரித்து முடிக்கவேண்டும்

புதுடெல்லி,அக்.26–

முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா மீதான புகாரை 10 நாட்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட், இடைக்கால சி.பி.ஐ. இயக்குநர் நாகேஸ்வர ராவ் கொள்கை முடிவு எதுவும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவை நியமித்தது. மத்திய அரசின் முடிவை எதிர்த்து, அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அலோக் வர்மா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலி நாரிமன், மத்திய அரசின் முடிவால், வர்மாவின் 2 ஆண்டுகள் பதவிக்காலம் எப்போது வேண்டுமானாலும் குறைக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது. சட்ட விதிகளுக்கு எதிராக சி.வி.சி.(மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்) மற்றும் மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளதாக கூறினார்.

அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், உங்களின் கோரிக்கையை நாங்கள் கவனிக்கிறோம். தற்போது, எந்த மாதிரியான இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்பதை ஆராய வேண்டும். பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானாவிடம் சி.வி.சி, 10 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் எனக்கூறினார்.

அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, விசாரணை நடத்த 10 நாட்கள் போதாது எனக்கூறியதுடன், நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி, சிபிஐ தற்காலிக இயக்குநர் நாகேஸ்வர ராவ் வழக்கமான பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். விசாரணை அதிகாரிகள் மாற்றம் குறித்து சீல் வைக்கப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை நாகேஸ்வர ராவ் கொள்கை முடிவு எதையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 12 க்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *