செய்திகள்

முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி மரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கொல்லம், நவ.24–-

தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமாபீவி வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1997-–ம் ஆண்டு ஜனவரி 25–-ந் தேதி முதல் 2001–-ம் ஆண்டு ஜூலை 3-–ந் தேதி வரை தமிழக கவர்னராக பதவி வகித்தவர் பாத்திமா பீவி. கேரள மாநிலம் பத்தினம்திட்டாவை சேர்ந்த இவர், தனது சொந்த ஊரிலேயே வசித்து வந்தார். 96 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் மரணம் அடைந்தார்.

பாத்திமா பீவி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளர். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

‘தமிழ்நாடு முன்னாள் கவர்னர், சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமைக்குரியவருமான பாத்திமா பீவி மறைந்தார் என்பதை அறிந்து வருந்துகிறேன்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதி, தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர், கேரள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு கவர்னர் என பல உயர்பொறுப்புகளில் பணியாற்றியுள்ள பாத்திமா பீவியின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு முன்னாள் கவர்னர் பாத்திமாபீவி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி என்ற சிறப்புக்குரிய பாத்திமாபீவி, சட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர். தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

புரட்சித்தலைவி அம்மாவின் நன்மதிப்பைப் பெற்றவரும், பல்வேறு பதவிகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவருமான பாத்திமாபீவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், கேரள முதல்வர் பினராயி விஜயன், சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் ஆகியோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இறுதிச்சடங்கு

இதற்கிடையே மரணம் அடைந்த பாத்திமா பீவி உடல் கொல்லத்தில் இருந்து அவரது சொந்த ஊரான பத்தனம்திட்டா கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்கு இன்று பத்தனம்திட்டா டவுன் ஜும்மா மசூதியில் நடைபெறுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *