செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் ரூ.25 ஆயிரமாக உயர்வு

சென்னை, செப்.14-

எம்.எல்.ஏ.க்கள் மரணமடைந்தால் குடும்பத்திற்கு பணப்பலன் கிடைப்பதற்கான சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேறியது

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த மார்ச் 24ந்தேதியன்று சட்டசபையில் அப்போதைய முதலமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிட்டார். எம்.எல்.ஏ.க்கள் பதவி காலத்தில் இறந்தால், அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். சட்டசபை மற்றும் சட்ட மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு (எம்.எல்.சி.) வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

இறந்துபோன எம்.எல்.ஏ. அல்லது மேலவை உறுப்பினரின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம், ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படும். இந்த பணப் பயன்கள் அனைத்தும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதுபோல, எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.சி.க்கள், ஏ.சி. உள்ளிட்ட அரசுக்குச் சொந்தமான போக்குவரத்துக் கழகத்தின் பஸ்கள் எதிலும் அவர்களின் வாழ்க்கைத் துணை அல்லது உடனிருப்பவர்களுடன் பயணம் மேற்கொள்ளும்போது, அவருக்கு ஒரு படுக்கை வசதி மற்றும் உடனிருப்போருக்கு இருக்கை வசதியை வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புகளை செயல்படுத்துவதற்காக இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *