செய்திகள்

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை, அக். 25–

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கில்,காவல்துறை 351 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மே 28-ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஐந்து ஆண்டுகள் என்னோடு குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றி விட்டதாகவும் 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் குற்றம் சாட்டினார்.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த புகாரின் அடிப்படையில் சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது, 313 பெண்ணின் அனுமதி இல்லாமல் கட்டாயப்படுத்தி கருவைக் கலைத்தல், 323- அடித்து காயம் ஏற்படுத்துதல், 417-நம்பிக்கை மோசடி, 376-பாலியல் வன்கொடுமை, 506(1)-கொலை மிரட்டல், 67(a) -தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கடந்த ஜூலை 7ஆம் தேதி அவருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கில் சைதாப்பேட்டை 11ஆவது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் 342 , 352 ஆகிய இரண்டு பிரிவுகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *