சிறுகதை

முன்கோபம் | கௌசல்யா ரங்கநாதன்

Spread the love

என் ஆட்டோ ஸ்டாண்டை நெருங்குகையில் என் சகாக்கள், அங்கு சில போலீசாருடன் எதையோ பேசிக்கொண்டிருந்ததை பார்த்தேன்.

காரணமே இல்லாமல் எனக்கு தாங்க முடியாத கோபம் வந்தது.

யாரை பார்த்தாலும் கோபம், கோபமாய் வருகிறது..காரணம் வறுமை..ராப்பகலாய் உழைத்தும் பற்றாக்குறை, பேரம் பேசும் பயணிகளிடம் கடுமை காட்ட வேண்டியிருக்கிறது.

என் நலம் விரும்பிகள் எல்லோருமே “நீ ரொம்ப

நல்லவன்தான்..மனிதாபிமானம் மிக்கவன்..ஆனா உன் முன்கோபம்தான் உனக்கு சத்ரு. கோபம், பாபம், சண்டாளம்னு ஒரு சொலவடைகூட உண்டுபா.நான் இப்படி சொல்றேனேனு

கோபிச்சுக்க மாட்டேனு நினைக்கிறேன்” என்பார்கள்.

“கோபப்படக் கூடாதுனுதான் நினைக்கிறேன். ஆனாலும் என்னையும் மீறி உணர்ச்சி வசப்பட வச்சுடறாங்க .இனிமேல் கோபம் வராம என்னைக்

கட்டுப்படுத்திக்க முயற்சிக்கிறேன்” என்பேன்.

“கிராமங்களில் ரொம்ப அன்னியோன்னியமாய் பழகிக்கிட்டிருக்கிறவங்க கூட அவங்க வயல்ல ஒரு அடி இரண்டு அடியை ஆக்கிரமிச்சுக்கிட்டா சண்டை போட்டு அது கை கலப்பாகி வெட்டுக் குத்து கொலை

வரை கூட போய், அப்புறம் நீதிமன்றம் வரை போய் வருஷக் கணக்கா தீர்ப்புக்காக காத்திருந்து.

ஊம்..இது மட்டுமா? ஒரு டீக்கடையில் டீ குடிக்கிற இரண்டு நண்பர்களுக்குள் உப்பு பெறாத விஷயத்துக்காக அதாவது ஒருத்தன் இன்னொருத்தன்கிட்ட ஒரு பீடி கேட்டு அவன் கொடுக்க மறுத்து, அதனால ஆத்திரப்பட்டு கொலை வரை போயிருக்குப்பா..”ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டும்பாங்க” நம்ம முன்னோர்கள்.

‘‘பார்த்து நடந்துக்கப்பா..இவ்வளவுதான் சொல்ல முடியும்..”

எனும்போதெல்லாம், என் தவறை உணர்கிறேன்..

“கோபத்தை, ஆத்திரத்தை அடக்க யோகா பண்ணி பாருங்களேன் ’’என்று கூட சொன்னவர்கள் உண்டு.

இப்படி பலவாறாய் எண்ணிக் கொண்டு என் ஆட்டோ ஸ்டாண்டை நெருங்குகையில், என் சகாக்கள் என்னை அங்கு நின்றிருந்த போலீசிடம் அறிமுகப்படுத்தினார்கள்..

ஊரில் ஏதாவது பிரச்சினையென்றால் உடனே ஆட்டோக்காரர்களை சந்தேகிப்பது ஏன் என்று தோன்றினாலும் நாமும் சமூகத்துக்கு நம்மாலான பங்களிப்பை செய்கிறோமல்லவா என்றும்

தோன்றியது. வீட்டில் ஏன் காலையில் சிடுசிடுத்து விட்டு வந்தோம். நம் இயலாமையை வீட்டாரிடமும் மற்றவர்களிடமும் காட்டி விடுகிறோம்..ஆனால் அவர்கள் எங்கு போய் முறையிடுவார்கள் தங்கள் மன வலியை என்றே தோன்றியது..

சே..ஏன் இந்த கோபம் எனக்கு..நேற்றும் இப்படித்தானே ஆயிற்று. வழக்கம் போல காலையில் வெறும் வயிற்றுடன், ஸ்டாண்டுக்கு வந்த நான் அங்கு ஒரு இளம் பெண் என் சகாக்களுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

என்னை பார்த்ததும் என் சக தோழர்கள் அந்த பெண்ணிடம் “இன்னைக்கு முதல் சவகர் அண்ணன்தான்..இங்கே எல்லாமே கிரமப்படித்தான் நடக்கும்..அண்ணன்

இன்னம் வரலையேனுதான் காத்துக்கிட்டிருந்தோம்..தோ அவரே வந்துட்டார்..நீ இவர் ஆட்டோல ஏறிக்குவோமா” என்று என் ஆட்டோவை சுட்டி காட்டினார்கள்.

அந்த பெண்ணும் எங்கே போகணும் என்றெல்லாம் சொல்லாமல் ஏறி அமர்ந்து கொண்ட பின் “எங்கேமா போகணும்?” என்ற போது அவள் காரணமே இல்லாமல் சிடுசிடுத்தாள்.

“நீ போப்பா சொல்றேன்” என்ற போதுகூட மௌனம் காத்தேன்.

அவள் முகம் இறுக்கமாய் இருந்தது. அழுதிருப்பாள் போலும்..இரண்டு கிலோமீட்டர் தூரம் போன பிறகு “எங்கே போகணும்னு நீ இன்னமும் சொல்லலையே?” என்றேன்..

“அதை அப்புறமா சொல்றேன்..நீங்க ஏன் மீட்டர் போடலை?” என்றாள்..

“மீட்டர்லாம் போட மாட்டேன்மா..மீட்டர் போட்டா கட்டுபடியாகலை” என்றேன்..

“அதை நான் ஏற்றப்பவே சொல்லியிருக்கலாம்ல..அதென்ன மீட்டர் போடாம வண்டி ஓட்டறது. அதுவும் மீட்டர் போடாம வண்டி ஓட்டக்கூடாதுனு சட்டமிருக்கிறப்ப?” என்ற போது ஒரு இளம் பெண்

என்னை எதிர்த்து பேசுவதா?” என்று கோபம் வந்தாலும் அடக்கி கொண்டேன்.

தொடர்ந்து

“இப்படித்தான் பயணிகளை ஏமாத்தறதா?”என்றவளைப் பார்த்து,

“என்னம்மா ஏமாத்தறோம்..? கவர்ன்மென்ட் ஃபிக்ஸ் பண்ணின ரேட் எங்களுக்கு கட்டுபடியாகலை”..

“அப்ப நீங்க இந்த பிரச்சினையை, உங்க யூனியன் மூலமா பேசித் தீர்த்துக்கணுமேயொழிய, இதுபோல அடாவடியெல்லாம் அடிக்கக்கூடாது”..

என்ற போது எனக்கு கோபம் பற்றிக் கொண்டு வந்தாலும் மிகுந்த சிரமப்பட்டு அடக்கி கொண்டேன்..

“பதில் சொல்லுங்க” என்ற போது

“உனக்கு எங்களைப் போல உள்ள ஏழைகள் கஷ்டம் விளங்காது.. அதான், அடாவடி, அது, இதுனு பேசறே”..

“இப்ப நீங்க மீட்டர் போடப் போறீங்களா இல்லையா, அதை முதல்ல சொல்லுங்க”..

“போட மாட்டேன்மா..நீ எங்கே போகணும்னு மட்டும் சொல்லு..”

“மீட்டர் போடுவீங்கனு நினைச்சுத்தான் உங்க ஆட்டோல ஏறினேன்.

நீங்க மீட்டர் போடலைனா நான் போலீசை கூப்பிடுவேன்”என்ற போது என் கோபம் எல்லை மீறிப்போக,

“அடச்சட் சாவு கிராக்கி..உன்னோட படா பேஜாராப் போச்சு.காலம் கார்த்தாலயே இப்படியா? நீ முதல்ல கீழே இறங்கி வேற ஆட்டோ பிடிச்சுக்கிட்டு போ. துட்டு கூட கொடுக்க வேணாம் தாயே எனக்கு”..

“இறங்க மாட்டேன் நடுவழியில .இப்பவே போலீசை கூப்பிடறேனா இல்லையானு பாருங்க”..

“கூப்பிட்டுடுவியா நீ? எங்க கையிலயா ராங் காட்டறே..காணாமப் பூடுவே. பார்த்து நடந்துக்க. பேஜார் கிராக்கி. முதல்ல வண்டியை விட்டு கீழே இறங்கித் தொலை. கசமாலம் பிடிச்ச பொம்பிளை”.

இப்படி ஏன்தான் வெடித்தேனோ . ஊம்..அவள் அழுதுகொண்டே “நிறுத்துங்க வண்டியை” என்றபோது நிறுத்தினேன்.

அந்தப் பெண் பையிலியிருந்து 100 ரூபாய் எடுத்து நீட்டினாள்..

“உன் துட்டே வேணாம் போ” என்ற போது, “நான் ஒண்ணும் ஓசியில உங்க ஆட்டோவில் வர விரும்பலை” என்றாள்..

“சரி.அப்ப 30 ரூபாய் மட்டும் கொடு போதும்” என்ற போது

“எங்கிட்ட சில்லறையில்லை. நீங்களே வச்சுக்குங்க இந்த நூறு ரூபாயை” என்று சொல்லி விட்டு வேகு,வேகு என்று நடக்கத் துவங்கினாள்..

“இந்தாம்மா உன் துட்டு எனக்கெதுக்கு. நீயே வச்சுக்க” என்று சொல்லி அவள் பின்னாலேயே ஆட்டோவை விரட்டினேன் “நில்லம்மா,நில்லம்மா ” என்று கத்தியவாறு .

அவள் எங்கேயாவது அருகில் உள்ள காவல் நிலயத்தில் புகார் கொடுத்துவிட்டால் என்ன செய்வதென்பதே என் பயம் .ஆனால் அவள் நான் தொடர்ந்து துரத்தி வருவதை பார்த்து முன்னிலும் வேகமாய் ஓடி

ஒரு சந்தினுள் நுழைந்தாள்.

இதை பலர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஏன் இப்படி நான் கோபப்பட்டேன் என்று புரியவில்லை. நேற்று முழுக்க என் மனம் அமைதியின்றி தவித்தது. இன்று காலை எங்கள் ஆட்டோ ஸ்டாண்டுக்கு நான் வந்தபோதுதான் என் சகாக்கள் என்னை போலீசாரிடம்

காட்டி பேசிக் கொண்டிருந்ததை பார்த்து தோழர்களிடம்

“என்னப்பா விசேஷம்?” என்ற போது போலீசார் என்னிடம் வந்து “உன்னை விசாரணை பண்ணத்தான் காத்துக்கிட்டிருக்கோம்..உன் வண்டி எண் இதுதானே ..நேத்து காலையில் ஒரு இளம் பெண் உன்

ஆட்டோல ஏறி, பாதில இறங்கிட்டாள்ள. நீ தகறார் பண்ணினப்ப” என்றபோது.

என் சப்த நாடியும் ஒடுங்கிப் போயிற்று..

“ஆமாம் சார்” என்றேன்..

“சரி வா ஸ்டேஷனுக்கு போகலாம். உங்கிட்ட கொஞ்சம் விசாரணை பண்ணணும்”.

“என்ன விசாரணை சார்?”

“ஏன் சொன்னாதான் தொர வருவீங்களோ..அடச்சட் ..கிளம்புயா சீக்கிரம்”..

இதற்குள் என் சக தோழர்கள் போலீசாரிடம் “அண்ணன் என்ன பண்ணினார்னு ஸ்டேஷனுக்கு கூப்பிடறீங்கையா?ஆட்டோக்காரங்கனா ஒரு

இளக்காரம் இல்லையா?” என்ற சகாக்களிடம்,

“ஊம்..என்ன பண்ணினாரா? உங்ககிட்டல்லாம் எதுவும் சொல்லலையா இவர்?

இல்லை விளங்காதது போல நீங்கள்ளாம் நடிக்கிறீங்களா?”

“சத்தியமா சொல்றோம் . ஐயா..அண்ணன் ரொம்ப ரொம்ப நல்லவர்”..

“இந்த நல்லவர்தான் ஒரு இளம் பெண்ணை நடுத்தெருவில துரத்திகினுபோய் துள்ள, துடிக்க கொலை பண்ணியிருக்கார் . நேத்து காலைல இதே நேரத்தில. உண்டா இல்லையானு கேளுங்க. இதோ

பாருங்க அந்த வீடியோ காட்சியை. தெருவில் போற ஒருத்தர், இவர் அந்த பெண்ணை “நில்லம்மா, நில்லமானு கத்திகிட்டு, துரத்திப் போனதை எங்களுக்கு வீடியோவாக்கி அனுப்பியிருக்கார்..”

“மறுபடியும் சொல்றோம் ஐயா.. அண்ணன் ரொம்ப சாது..மனிதாபிமானம் மிக்கவர்..என்ன ஒண்ணு..கொஞ்சம் கோபப்படுவார்..அதுகூட வறுமை, இயலாமையாலதான்”..

“கோபப்படுவார்ல..அந்த கோபம்தான் தலைக்கேறி, உணர்ச்சி வசப்பட்டு கொலையில முடிஞ்சிருக்குனு நினைக்கிறோம்..”

“ஐயா சத்தியமா நான் எதுவும் பண்ணலை “.

“அதை ஸ்டேஷன்ல வந்து சொல்லு .உண்மையை சொன்னா தண்டனை கம்மி.இல்லைனா போலீஸ் டிரீட்மென்ட் எப்படியிருக்கும்னு உனக்கு தெரியும்ல?”என்ற போலீசாரைப் பார்த்து..

எனக்கு அழுகை, அழுகையாய் வந்தது.

நேற்று காலை வந்த அந்த பெண்ணல்லவா என்னை எடுத்தெறிந்து பேசினாள்.அவள் முகம் இறுக்கமாய் இருந்ததாக சொன்னேன் அல்லவா?

பாவம் இளம் பெண் .காலேஜில் படிப்பவளா? அல்லது படிப்பு முடித்து எங்கேயாவது வேலை பார்ப்பவளா? வீட்டில் ஏதாவது பிரச்சினையா? ஏன் என்னிடம் வண்டியில் ஏறியதிலிருந்து சிடுசிடுக்க

வேண்டும். என் பக்கமும் தப்பு இருக்கிறது. எப்போது அவள் மீட்டர் போடு என்றாளோ, அப்போதே மீட்டர் போட்டிருக்கலாம் அல்லவா?நான் ஏன் முரண்டு பிடித்தேன்?

அதிகாலை வேளை என்பதால் தெருவில் ஜனநடமாட்டம் அதிகமில்லை..டிராஃபிக் போலீசாரும் டியூடியில் இல்லை. அவர்கள் இருந்திருந்தால் அந்தப் பெண் அனேகமாய் என்னை போலீசில் மாட்டி விட்டிருக்க முடியும்..

“இனிய உளவாக இன்னாத கூறல், கனியிருப்ப காய் கவர்ந்தற்று” என்ற வள்ளுவன் வாக்கை என் சகாக்கள்/குடும்பத்தார்/நலம் விரும்பிகள் அடிக்கடி என்னிடம் சொல்வார்கள். நானும் என் முன் கோபத்தை வெகுவாக அடக்க முயற்சி செய்துதான் வருகிறேன் என்றாலும் சமயங்களில் என்னையுமறியாமால் வெடித்து விடுகிறேன்.நேற்று என்னை எடுத்தெறிந்து பேசிய அந்த இளம் பெண்ணை நானும் கூட கெட்ட வார்த்தைகளால்

சாடினேன். அவள் வண்டியை விட்டு நடுத்தெருவில் இறங்கி வேக வேகமாய் ஓடிய போது அவள் என் மீது தூக்கியெறிந்து விட்டுப் போன ரூ.100/-ஐ எனக்கு

வேணாம். 30 மட்டும் கொடு போதும் என்று சொல்லியும் அவள் “நீயே வச்சுக்க எல்லா துட்டையும்” என்ற போது என் தன்மானம் தலை தூக்கிட “நீ ஒண்ணும் எனக்கு பிச்சை போட வேணாம்..

இந்தா …உன் துட்டு ரூ .100 ஐ நீயே வச்சுக்க” என்று சொல்லி கொடுக்கத்தான் ஆட்டோவை வேகமாய் அவள் பின்னாலயே ஓட்டிக் கொண்டு போனேன், வெளிறிய முகத்துடன் தலை விதியை நொந்துகொண்டு,

“இந்தாமா நில்லு. நில்லு” என்று உரக்க கத்திக் கொண்டு. அவள் எங்கேயாவது அருகில் உள்ள காவல் நிலையம் போய் நான் கன்னா பின்னாவென, அசிங்கமாய், கண்டபடி ஏசினேன் நடுத்தெருவில் என்று புகார் கொடுத்து விட்டால் என்னையல்லவா துளைத்தெடுத்து விடுவார்கள் என்றெண்ணி.. நேற்றே அந்த சம்பவத்தை நான் மறந்தும் விட்டேன்.

ஆனால் இப்போது போலீசார் ஏன், என் வண்டியில் நேற்று வந்த அந்தப் பெண்ணை நான் கொலை செய்து விட்டதாக! கடவுளே ஏன் என்னை இப்படியெல்லாம் சோதிக்கிறாய்!

அதற்குள் அங்கு கூட்டம் கூடி விட்டது..அவரவர்கள், அவரவர்களுக்கு தோன்றியதை பேசினார்கள்.. அதாவது நான் என் ஆட்டோவில் வந்த அந்த இளம் பெண்ணை பாலியல் தொந்திரவு செய்ய

முயற்சிக்கையில் அவள் ஆட்டோவிலிருந்து குதித்து தப்பியோட முயன்றதாகவும் நான் அவளை துரத்திப் போய் கொலை செய்ததாக கூறுகிறார்களே.

கடவுளே என் முன் கோபம் என்னை எதுவரை கொண்டு விட்டிருக்கிறது.

கூடவே அந்தப் பெண்ணை யார் கொலை செய்தது? எதற்காக? ஒருக்கால் அவள் கொலையுண்டிருந்தால் அதன் பின்புலம்தான் என்ன?

பெரிய மனிதர்கள் சப்போர்ட் இருக்கிறதா? யாரோ செய்த கொலையை ஏன் என் மீது சுமத்தி இந்த வழக்கை முடிக்க போலீசார் முயற்சி செய்கிறார்களா

என்ன ? அதே சமயம் அப்படியெல்லாம் எதுவும்

இருக்காது.

நான் ஏன் வீணே பயப்பட வேண்டும்? அந்தப் பெண் வேகமாய் ஒரு சந்துக்குள் நுழைந்த போது, நானும் ஸ்டாண்டுக்கு திரும்பி விட்டேனே? அவள் ஏன் அந்த சந்துக்குள் நுழைந்தாள்?இதில் வேறென்னவோ மர்மம் இருக்கிறது.

நேற்று வண்டியில் ஏறும்போதே அவள் குழப்பமாய் இருந்தாளே. அவளை கொலை செய்ய யாரோ ஒருவனோ, அல்லது ஒரு கும்பலோ துரத்திக் கொண்டு வந்திருக்கலாம். அவர்களிடமிருந்து தப்பிக்கத்தான் என் ஆட்டோவில் ஏறினாளோ ? அதுவும் எங்கு போக வேண்டுமென்று நான் கேட்டபோது “நீங்க முதல்ல போங்க, அப்புறம் சொல்றேன்” என்றாளே.எங்கே போக வேண்டுமென்பதைக் கூட முன் கூட்டியே தீர்மானிக்காமல்தான் இறுக்கமான முகத்துடன் வண்டியில் ஏறினாளோ! இது தெரியாமல் நானும் கடுப்படிக்க, ஆபத்து பின் தொடர்ந்து வந்து விடுமோ என்ற அச்சத்தில் ஒரு

இடத்தில் இறங்கிக் கொண்டு பக்கத்தில் உள்ள முட்டு சந்தில் நுழைந்தாளோ! நான் நினைத்தே பார்க்க முடியாத ஒரு சம்பவம் அல்லவா நடந்திருக்கிறது.

கடவுளே நீதான் என்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு போலீசாருடன் போனேன். என் சகாக்களும் “நீ போ அண்ணே. நாங்க லாயரை இட்டுகினு வரோம். ஆட்டோக்காரங்கனா

என்ன இளப்பமா?” என்றது ஆறுதலாய் இருந்தது..

காவல் நிலையம் போனதும் அங்கு இன்ஸ்பெக்டர் இல்லை.

ஒரு ஓரத்தில் உட்கார வைக்கப்பட்டேன். சற்று நேரத்தில் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் “இந்தாள்தான் அந்த அக்கியூஸ்டா” என்றார்..

“சார் நான் நிரபராதி” என்ற போது

“ஊம்..அப்படியே இருக்கட்டும்..நேத்து என்ன நடந்ததுனு நீ ஒளிக்காம சொல்லிட்டா நல்லது.இல்லைனா போலீஸ் விசாரணை வேற விதமாயிருக்கும். என்ன நடந்தது?

நேத்து காலையில?” என்ற போது நடந்ததை அப்படியே சொன்னேன்..

“அப்ப நீ நேத்து உணர்ச்சி வசப்பட்டு கத்தினது. ஐ மீன் .. எங்க கையிலயா ராங்க் காட்டறே? காணாமப் பூடுவேனு மிரட்டினேல்ல. அப்புறம் அந்த பெண்கிட்ட சொல்லவே நா கூசுது. ஆட்டோலயே

தப்பா நடந்துக்க…..அசிங்கமா இல்லை..பொது மக்கள் உங்களை நம்பித்தானேயா ஆட்டோவில் வராங்க..”

“சார் சத்தியமா நான் கொஞ்சம் கோபமாய் பேசினது மட்டும் உண்மை.மத்தபடி நீ காணாமப்பூடுவேனும் எங்கையிலயா ராங் காட்டறியானும்

என் தாய்மேலே சத்தியமா நான் பேசலை சார்..என்னை நம்புங்க. உணர்ச்சி வசப்பட்டு பேசினது தப்புனு இப்ப தோணுது.

அதற்குள் என் சக ஓட்டுனர்கள் லாயருடன் அங்கு வந்தனர். அவரிடம் இன்ஸ்பெக்டர் “விசாரணை நடக்குது. ..வேற ஒண்ணுமில்லை” என்றார்..

அப்போது அந்த லாயரும் நேத்து பூரா இவர் எங்கெங்கெல்லாம் சவாரி பண்ணினார்ன்றதெல்லாம் அங்கங்கே உள்ள CCTV காமிராவில் பதிவாகியிருக்கு. அதாவது நேத்து பூரா இவருக்கு ஒண்ணு

மாத்தி ஒண்ணு சவாரி இருந்துக்கிட்டே இருந்திருக்கு.மதிய சாப்பாட்டுக்கு கூட போகாம..இரவு 11 மணி வரை..அப்புறமாதான் வீட்டுக்கே போயிருக்கார்..அப்படி இருக்கச்சொல்ல, எப்படி இவரை குற்றவாளினு..”

என்ற லாயரிடம் “அதான் சொன்னேனே, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைதான் பண்ணிக்கிட்டிருக்கோம்னு” என்று பேசிக் கொண்டிருக்கையில், இன்ஸ்பெக்டருக்கு ஒரு வாட்ஸப் மெஸேஜ் வந்தது. அது ஒரு

மருத்துவ மனையிலிருந்து..

விஷயம் என்னவென்றால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள் விஷமருந்தி என்று.

அதில் அவள் போட்டோ இருந்தது.

அப்பா தப்பித்தோம் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் இன்ஸ்பெக்டர் என்னிடம் “ஏன்யா, நீ செஞ்ச அக்கிரமம் வெளியில் வராதிருக்கணும்னு அவளுக்கு விஷம் வாங்கி கொடுத்து

தற்கொலைனு..”என்ற போது எங்கள் லாயர் “இன்ஸ்பெக்டர் நாவை அடக்கி பேசுங்க..சும்மா யூகத்தின் அடிப்படையில் பேசாதீங்க..ஆட்டோக்காரங்கனா என்ன இளப்பமா? ஒரு நாள் ஆட்டோக்கள்

ஓடலைனா மாநகரமே நாறிப் பூடும்..” என்ற போது “மன்னிச்சிருங்க” என்றார். .அப்போது–

இன்னொருவர் வந்து தன்னை ஒரு ஃபார்மசிக்காரர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு, இந்த செல்போனை என் ஃபார்மசிக்கு மருந்து வாங்க வந்த யாரோ விட்டுட்டுப் போயிட்டாங்க நேத்தைக்கு.

தொலைச்சவங்க யாராச்சும் வந்து கேட்டா கொடுத்துடலாம்னு தான் இதுவரை வெயிட் பண்ணிக்கிட்டிருந்தேன். இதுவரை யாரும் இந்த போனை கேட்டு எங்கிட்ட, வராததால் போலீசில் ஒப்படைக்கலாம்னுதான்

வந்தேன்” என்று சொல்லி அந்த செல்போனை சப் –இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தார்.

இன்ஸ்பெக்டரும் “இருக்கிற தொந்திரவு போதாதுனு இது வேறயா?” என்று அலுத்துக் கொண்டு அந்த செல்லில் கடைசியாய் யார் போன் பண்ணியது என்று பார்த்து விட்டு….

அந்த எண்ணுக்கு ஒரு கால் கொடுக்க,

மறுமுனையில் ஒரு ஆண் பதற்றமான குரலில் “மறுபடி, மறுபடி ஏன் போன் பண்ணி என்னை தொந்திரவு பண்றேடி. நான்தான் இப்ப உடனடியாய் உன்னை கலியாணம் செஞ்சுக்கலாம் முடியாது. கருவை கலைச்சிடு எப்படியாவாதுனு சொன்னேனே. உன்னால முடிஞ்சதை செஞ்சுக்க. நீயும்தானே ஜாக்கிரதையாய் இருந்திருக்கணும். வைடி போனை..” என்ற எண் எங்கிருந்து

வருகிறது என்று அந்த சப்– இன்ஸ்பெக்டர் உடனடியாய் கண்டுபிடித்து அந்த ஸ்பாட்டுக்கு போனால் போன் செய்த நபர் எதிர்பாராத விதமாக அங்கு வந்த போலீசாரை பார்த்து நடுங்கி வியர்த்து ஊற்றிட

“நான் ஒண்ணும் செய்யலை சார் சுமதியை..அவகூட நான் நெருக்கமா பழகினது வாஸ்தவம். அந்த நெருக்கத்தில் அவ கர்பமாயிட்டா. அவ என்னை கலியாணம் செஞ்சுக்க வற்புறுத்தினா. எனக்கோ வேலை இல்லை. பிரச்சினை வரும்..கலியாணமெல்லாம் வேண்டாம். கருவை கலைச்சிடுனு சொன்னேன். .அவ சம்மதிக்கலை. கலியாணத்தை சிம்பிளா ஒரு கோயில்ல

செஞ்சுக்கிட்டு ஊரை விட்டே போய் மானமா கூலி வேலை செஞ்சாவது பொழைப்போம்னு வற்புறுத்தினா. அப்படி எங்கே போனாலும் எங்க சாதிக்காரங்க ஆட்களை வச்சு தேடி நம்மை கொன்னு

போட்டுவாங்க..அதனால் இன்னம் கொஞ்ச காலம் பொறுமையாய் எனக்கொரு நல்ல வேலை கிடைக்கிறவரை பார்ப்போம்னு சொல்லி கருவை கலைக்க இரண்டு தனியார் மருத்துவ மனைகளை

நாடினோம்..அந்த இரண்டு இடங்களிலும் அவங்க எங்க மேல சந்தேகப்பட்டு உங்க வீட்டாளுங்களை கூப்பிட்டுக்கிட்டு வாங்கனு சொல்லிட்டாங்க.

அப்புறம் இரண்டொரு பார்மசிகாரங்களை அணுகி கருக்கலைப்பு மாத்திரைகள் கேட்டோம் நானும் சுமதியுமா.

அவங்களும் டாக்டர் பிருஸ்கிருப்ஷன் இல்லாம கொடுக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க. சுமதி அழுதுகிட்டே இருந்தா. இன்னம்

கொஞ்ச நாட்களில் எங்க வீட்டுக்கு தெரிஞ்சுடுமே..என்னை கொன்னே போட்டுருவாங்களே., அதான் ஊரை விட்டே கண்காணாம வெளி மாநிலம் ஏதனாச்சும் ஒண்ணுக்கு போய் நம்ம வாழ்க்கையை தொடங்கலாம்னு சொன்னா….த பாரு மறுபடியும் சொல்றேன். இந்த உலகத்தின் எந்த மூலைக்கு நாம் போனாலும் சமூக வலைதளங்கள் மூலமா நம்மை கண்டு பிடிச்சு வெட்டி போட்டுடுவாங்க. அதனால

நான் முதல்ல ஒரு வேலையை தேடிக்கிட்டு உன்னை கலியாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்

.அப்புறம் அவளை சந்திக்கிறதையே தவிர்த்தேன்.

என் செல்லையும் ஆஃப் பண்ணிட்டேன்.

இப்படிநான் செஞ்சது பெரிய பாவம்தான்.

இப்ப இன்னைக்கு காலையிலதான் என் சுமதி மர்மமான முறையில் இறந்துட்டதா செய்தி டி.வில பார்த்து ஷாக்காயிட்டேன். எனக்கு மன்னிப்பே கிடையாது. எனக்கென்ன தண்டனையோ அதைக் கொடுங்க..”

என்றபோது இன்ஸ்பெக்டர் என்னை பார்த்து “ஏதோ தப்பு நடந்து போச்சு. மன்னிச்சிரப்பா..நம்பினவன் கைவிட்டுட்டான். என்ன பண்றதுனு அந்த பெண்ணுக்கு புரியலை. அவனையும் பார்க்கவோ,

பேசவோ முடியலை..எங்கே வீட்டுக்கு தெரிஞ்சா மானம் போயிடுமேனு பயம். இந்த மன நிலையோட நேத்தைக்கு இந்த பெண் உன் ஆட்டோல ஏறியிருக்கா. அப்ப அவளுக்கே எங்கே போறது என்ன செய்யறதுனே விளங்கலை.

அதனால்தான் நீ நேத்தைக்கு எங்கேமா போகணும்னு அவகிட்ட கேட்டப்ப நீங்க போங்க. சொல்றேன்னு சொல்லியிருக்கா. இன்னொண்ணு உங்க guess கரக்ட். .அதாம்பா இந்தப் பெண் நேத்து உன் ஆட்டோல ஏறினப்ப இறுக்கமான முகத்தோட, எதையோ பறி கொடுத்தாப்பல இருந்திருக்கா. தவிர, காரணமே இல்லாம உங்கிட்ட வெடிச்சிருக்கா..

அப்புறம் இந்தப் பெண் உங்கிட்ட வாக்குவாதம் பண்ணிட்டு கீழே இறங்கி ஓடினானு சொன்னியே, அவ எங்கே போனா தெரியுமா? இந்த பார்மசியைத் தேடித்தான்.அங்கே போய் மூட்டைப்பூச்சி மருந்தை

வாங்கி குடிச்சிருக்கா. பதற்றத்தில் யாராச்சும் பார்த்துடப் போறாங்களோனு பயந்து தன் செல்லையும் அந்த கடையிலேயே விட்டுட்டுப் போயிட்டா..” என்ற போது “சார்..நல்ல வேளையா நான் கும்பிடற

எங்க குல தெய்வம்தான் என்னை இவ்வளவு பெரிய இக்கட்டிலிருந்து காப்பாத்தியிருக்கு.இனிமேல் எந்த காரணத்தைக் கொண்டும் நான் யாரண்டவும் கோபப்படவே மாட்டேன் சார்” என்றேன்.

என் நெஞ்சை வெகுவாய் அழுத்திக்கொண்டிருந்த ஒரு பாரம் குறைந்தது போலிருந்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *