கூடலூர்,மே.14 –
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்த விழாவில், 12 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு கரும்பு வழங்கினார். யானை பாகன்களுக்காக கட்டப்பட்ட புதிய வீடுகளை ‘ரிமோட்டில்’ திறந்து வைத்து, பயனாளிக்கு சாவி வழங்கி வீடுகளை பார்வையிட்டார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் மே மாதம் உலக புகழ்பெற்ற மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து ரசித்து செல்கின்றனர். கோத்த கிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா கடந்த 3 -ந் தேதி தொடங்கியது.
வருகிற 15 -ந் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி தொடங்குகிறது.மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர், 5 நாட்கள் சுற்றுப் பயணமாக நேற்று முன்தினம் கோவையில் இருந்து காரில் ஊட்டிக்கு வந்தார். அவருக்கு உயர் அதிகாரிகள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வந்தார். அங்கு அவரை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து ஆதிவாசி மக்கள் பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்தபடி நடனமாடி முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலினை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து அவர், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் வளாகத்தில் பாகன்கள் குடும்பத்தினருக்கு ரூ.5.06 கோடி செலவில் கட்டப்பட்ட 44 வீடுகள் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
பின்னர் அவர், பாகன் மாறன், கமலா தம்பதியிடம் வீட்டுக்கான சாவியை வழங்கினார். மேலும் அவர், அதே பகுதியில் மரக்கன்றுகள் நட்டார்.
தொடர்ந்து, தெப்பக்காடு யானைகள் முகாமில், குட்டி யானைகள் அதன் பாகன்கள் இடையேயான பாச பிணைப்பினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண படத்துக்கு, ஆஸ்கார் விருது கிடைத்தது. அதில் இடம்பெற்ற, பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி மற்றும் யானை பாகன்களை சந்தித்து பேசினர்.
அதன்பிறகு அவர், லண்டானா, உன்னி செடிகளின் குச்சிகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட யானைகளின் உருவங்களை பார்வையிட்டார். மேலும் தமிழக வனத்துறை சார்பில் வனச்சரகர்களின் பயன்பாட்டுக்காக ரூ.2 கோடியே 93 லட்சம் மதிப்பிலான 32 புதிய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதேபோல் வனவிலங்குகள் பாதிக்கப்படாமல் இருக்க தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை 15 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரூ.5 கோடியில் முதுமலை வனப்பகுதி வழியாக (வான்வெளி தொகுப்பு கம்பிகள்) உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து வளர்ப்பு யானைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரும்புகள் கொடுத்து மகிழ்ந்தார். பின்னர் எலிபன்ட் விஸ்பெரர்ஸ் என்ற ஆஸ்கார் விருது பெற்ற குறும்படத்தில் நடித்த பொம்பன், பெள்ளியை சந்தித்து பேசினார். மேலும் அவர்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்கினார்.
அதைத்தொடர்ந்து அவர், வனத்துறை அதிகாரிகளிடம் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார். அப்போது அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தமிழக வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சீனிவாச ரெட்டி, வன உயிரின காப்பாளர் ராகேஷ்குமார் டோக்ரா, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, ஆ.ராசா எம்.பி., அரசு கொறடா க.ராமச்சந்திரன், கோவை மண்டல ஐ.ஜி.செந்தில்குமார், டி.ஐ.ஜி.சசிமோகன், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கிருபா சங்கர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதுமலைக்கு திட்டங்கள்
முதல்வர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில்,”சென்னையில் இருந்து வருவதால், இங்கு காலநிலை நன்றாக உள்ளது. முதுமலைக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். மேலும் பல திட்டங்களை நிறைவேற்றுவோம்,”என்றார்.
முன்னதாக ஊட்டியில் இருந்து முதுமலைக்கு வரும் வழியில் மாவனல்லா பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலை யோரம் திரண்டு நின்ற பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரை, பெண்கள் குழந்தைகள் ஆர்வமுடன் கை கொடுத்து வரவேற்றனர். சிலர் பூங்கொத்து கொடுத்து மகிழ்ந்தனர்.
![]()





