டெல்லி, ஜன. 30–
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், மாநில ஒதுக்கீட்டுக்கு இந்த தீர்ப்பு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் அரியானா தலைநகரான சண்டீகர் அரசு மருத்துவக் கல்லூரியில், வசிப்பிட அடிப்படையில் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
மாநிலங்களை பாதிக்கும்
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சுதான்ஷூ தூலியா, எஸ்.வி.என்.பாட்டீ ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நாம் அனைவரும் இந்தியாவில் வசித்து வருகிறோம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான உரிமையை, அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டனர்.
இளநிலை மருத்துவப் படிப்புகளில், ஒரு மாநிலத்தில் வசிப்போருக்கு குறிப்பிட்ட அளவில் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று கூறிய உச்சநீதிமன்றம், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14-க்கு எதிரானது என்று தீர்ப்பளித்தது. எனவே, மாநில ஒதுக்கீட்டில் வரும் முதுநிலை மருத்துவப்படிப்பு இடங்களையும் நீட் தேர்ச்சி அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த தீர்ப்பு, மாநில அளவிலான மருத்துவ இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவித்துள்ள நிலையில், இதனை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.