சென்னை, ஆக.7–-
முதுநிலை நீட் தேர்வு எழுதுவதற்காக அண்டை மாநிலங்கள் வரை தொலைதூரத்தில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையங்களை தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் மாற்றியுள்ளது. இதனால் தமிழக தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி நடத்தப்பட இருந்த நிலையில், அதற்கு முந்தைய நாள் இரவு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வு வருகிற 11-ம் தேதி காலை மற்றும் மதியம் என 2 அமர்வுகளில் நடத்தப்பட உள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருந்து சுமார் 25 ஆயிரம் பேர் உள்பட நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் பேர் எழுத இருக்கிறார்கள்.
ஆந்திரா, கர்நாடகாவில் ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் இருந்து தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த தேர்வர்கள் சிலருக்கு சுமார் 500 கிலோ மீட்டர் முதல் 1,000 கிலோ மீட்டர் வரையிலான தூரத்தில் இருக்கக் கூடிய வகையில் தேர்வு மையங்கள், அதாவது அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் ஒதுக்கப்பட்டு இருந்தன.
இவ்வளவு தூரத்தில் தேர்வு மையங்களை கடைசி நேரத்தில் ஒதுக்கினால் எப்படி செல்வது?, சென்று வருவதற்கான பயணச் செலவுகளும் அதிகமாகுமே? என தங்களுடைய ஆதங்கத்தை தேர்வர்கள் வெளிப்படுத்தி இருந்தனர். இதுதொடர்பாக பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து தமிழக எம்.பி.க்கள், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து இதுதொடர்பாக வலியுறுத்தினர். அதன் அடிப்படையில், தொலைதூரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்ட தமிழக மாணவர்களுக்கு, தமிழ்நாட்டிற்குள்ளேயே தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக மையங்களை மாற்றி அமைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் திருச்சி, அரியலூரை சேர்ந்த தேர்வர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை கரூர், திருச்சிக்கு மாற்றியிருப்பதாகவும், அதற்கான தகவல்கள் தேர்வர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப் பட்டிருப்பதாகவும், இதேபோல் மற்ற தேர்வர்களுக்கும் தேர்வு மையங்கள் மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.