செய்திகள்

முதுநிலை சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட் அனுமதி

சென்னை, மார்ச் 16–

அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை சிறப்பு மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

முதுநிலை சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (தேசிய அளவிலான நுழைவு மற்றும் தகுதித் தோ்வு) எஸ்.எஸ். தோ்வில் பங்கேற்ற சிலா் சாா்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு, தமிழக அரசின் அரசாணையை செயல்படுத்திக் கொள்ளலாம் என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்குகிறோம்.

தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு தந்த அரசாணையை இடைக்காலமாக செயல்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் சிறப்பு மருத்துவ உயர்படிப்புகளில் கலந்தாய்வு நடத்தி மாணவர்களை நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிரான ரிட் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம். பிரதான வழக்கு விடுமுறைக்கு பிறகு விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.