சிறுகதை

முதல் விசாரணை | ராஜா ராமன்

Spread the love

திருட்டு சம்பவம் நடைபெற்ற வீட்டு வாசலில் போலீஸ் ஜீப் வந்து நின்றது.

காலை நேரம் மணி ஆறு .

ஜீப்பிலிருந்து இறங்கினார் சப்–இன்ஸ்பெக்டர். அக்கம் பக்கத்தினர் அவரவர் வீட்டு காம்பவுண்ட் சுவரை பிடித்துக்கொண்டு தலையை எக்கி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். வீட்டின் உள்ளே நுழைந்தார் சப்–இன்ஸ்பெக்டர் . அங்கு வீட்டு உரிமையாளரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்த ஏட்டும் மற்ற இரண்டு கான்ஸ்டபிளும் சப் – இன்ஸ்பெக்டர் வருவதை அறிந்தவுடனே அவர் அருகில் வந்து வணக்கம் செலுத்தினர்.

அவர்களுடன் வீட்டு உரிமையாளரும் சேர்ந்து வணக்கம் சொன்னார்.

அதற்கு தலையை மட்டும் ஆட்டிவிட்டு திருட்டு சம்பவம் நடந்த அறையை நோக்கி சென்றார் சப்–இன்ஸ்பெக்டர் . அங்கு கைரேகை நிபுணர்கள் பொருளின் மீது படிந்திருந்த கைரேகை தடயங்களை ஆராய்ந்து பதிவு செய்து கொண்டிருந்தனர். உள்ளேயிருந்த பூட்டு உடைக்கப்படாத பீரோவில் நகை ,பணம் மட்டும் திருடபட்ட நிலையில் மற்ற எல்லா பொருளும் கலையாமல் இருந்த இடத்தில் இருந்தபடியே இருந்தன.

‘‘ஏட்டு.. வீட்டுகாரரை இங்க வரச்சொல்லுங்க.’’ என்றவுடன் ஹாலில் கலங்கி நின்றுகொண்டிருந்த வீட்டு உரிமையாளரும் அவரின் மனைவியையும் சப்–இன்ஸ்பெக்டருக்கு அருகில் சென்றனர்.

‘‘உங்க வீட்டுல மொத்தம் எத்தனைபேரு …’’

‘‘நாலு பேரு சார்..’’

‘‘உங்களுக்கு எத்தன புள்ளைய..!’’

‘‘ஒரு பையன், ஒரு பொண்ணு சார்..

‘‘அவுங்க என்ன பண்ணுறாங்க…!

‘என் பையன் வெளிநாட்டுல இருக்கான்! என் பொண்ணு கோயம்புத்தூர்ல ஐடி கம்பெனில ஒர்க் பண்ணுரா.. ! சார்

இந்த வீட்டுல இருக்குறது யாராரு..!

நானும் என் மனைவியும் மட்டும் இந்த வீட்டுல இருக்கோம் சார்..’’ என்று சொன்னார் வீட்டுக்காரர்.

‘‘நீங்க என்ன வேல பாக்குறீங்க!..’’

‘‘நான் கொஞ்ச நாளைக்கு முன்னால கே.ஆர்.கே. மோட்டார் கம்பனியில அக்கவுண்டன்ட் வேலை பார்த்தேன். இப்போ அதிலிருந்த விலகிட்டேன் . இப்ப வீட்டுல சும்மா தான் இருக்கேன் சார்..’’ என்று சொன்னவரை கொஞ்சம் புருவத்தை உயர்த்தி பார்த்த சப்–இன்ஸ்பெக்டர்

‘‘எதுக்கு விலகினீங்க!..’’

‘‘என் மகன் வேலைக்கு போக வேணாம்னு சொல்லிட்டான் அதனாலதான்..! சார் விலகிட்டேன்..’’

‘‘இது உங்களுக்கு சொந்த வீடா..? இல்ல வாடகை வீடா..?

‘‘சொந்த வீடுதான் சார்..’’

‘‘திருட்டு நடக்கிற போது நீங்க எங்க போனீங்க..! என்று கேட்ட போது இடையில் புகுந்த ஏட்டு

‘‘சார் ..அவங்க குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட..’’ என்று சொன்னபோது சப்–இன்ஸ்பெக்டர் ஏட்ட முறைத்துப் பார்த்தார். உடனே சுதாரித்துக்கொண்ட ஏட்டு தன் பேச்சை நிறுத்திவிட்டு

‘‘ஏய்.. 507 வாசல்ல என்னய்யா கூட்டம் அவங்கல போகச் சொல்லு..’’ என்று ஒரு கான்ஸ்டளை கடிந்துகொண்டார் .

‘‘சொல்லுங்க.. நீங்க எங்க போயிருந்தீங்க..!

‘‘சார்.. நாங்க சாமி கும்புட எங்க கிராமத்துக்கு போனோம்..’’

‘‘நீங்க ஊருக்கு போனபோது பீரோ சாவியை எடுத்துட்டு போனீங்களா..! இல்ல இங்க வச்சுட்டு போனீங்களா..!

‘‘பீரோ சாவியையும் சேத்துதான் எடுத்துட்டு போணோம் சார்’’ இப்படி கேள்வி கேட்டுகொண்டே சென்று வீட்டு ஹாலில்

உள்ள சோபாவில் அமர்ந்தார் சப்–இன்ஸ்பெக்டர்.

அருகில் நின்று கொண்டிருந்த ஏட்டு கொஞ்சம் குனிந்தபடியே

‘‘சார்.. டீ.. எதுவும் வாங்கிட்டு வரச்சொல்லவா..!

‘‘வேணாம்.. நான் ஸ்டேசனுக்கு போறேன் . நீங்க இங்கயிருந்து எல்லா விசயத்தையும் விசாரிச்சுட்டு வாங்க.. அப்பறம் கைரேகை ரிப்போர்ட் எப்ப வரும்னு கேட்டுட்டு வந்திருங்க..’’ என்று சொல்லி விட்டு சோபாவிலிருந்து எழுந்து வீட்டுக்காரரை பார்த்த சப்–இன்ஸ்பெக்டர்

‘‘சார்.. திருடனை பிடிச்சிருவோம். உங்களுக்கு யாருமேலேயாவது சந்தேகம் இருக்கா..! என்ற கேள்விக்கு சிறிது நேரம் யோசித்துவிட்டு தலையை ஆட்டியபடியே ‘‘இல்லை சார்..’’ என்று வீட்டுக்காரர் கவலையான முகத்துடன் அவர் மனைவியை பார்த்துக்கொண்டே சொன்னார் .

‘‘சரி சார்.. நான் கிளம்புறேன். நீங்க மேற்கொண்டு ஏதாவது விசயம் இருந்தா எங்க போலீஸ்கிட்ட சொல்லுங்க..’’ என்று கூறிவிட்டு ஜீப்பில் ஏறி புறப்பட்டார் சப்–இன்ஸ்பெக்டர்.

**

டீ கடையில்

‘‘பழமுதிர்சோலை எனக்காகத்தான்..’’

படைத்தவன் படைத்தான் அதுக்காகத்தான்..’’ என்ற பாடல் கேட்டுக்கொண்டிருந்தது.

‘‘ஏய்…. ரவி ..ஒரு டீ கொடுப்பா.. என்றான் பக்கத்து கடைகார இசக்கி.

‘‘அண்ணே.. என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்தீட்டீங்க…!

‘‘இல்ல.. ரவி நேத்து அப்படி ஒன்னும் சொல்லுறளவுக்கு வருமானம் இல்ல..! அதான் சீக்கிரம் வந்திட்டேன்..’’ என்று இசக்கி பேசிக்கொண்டிருக்கும் போது டீக்கடை வாசலில் ஒரு ஜீப் மெதுவாக வந்து நின்றது. ரோட்டை பார்த்தபடியே டீயை குடித்துக்கொண்டிருந்த இசக்கி ஜீப் நின்றவுடன் முதுகை திருப்பிகொண்டான் .

டே.. இசக்கி..’’ டே.. இசக்கி..’’ என்ற குரல் கேட்டவுடன் அதுவரை சுவையாக குடித்துக்கொண்டிருந்த ‘‘டீ’’ திடீரென சுவைமாறி கசப்பு ஏற்பட்டால் முகத்தில் என்ன பாவனை வருமோ..! அதே பாவனையுடன் ஜீப்பை நோக்கித் திரும்பினான் இசக்கி. அதில் முன் சீட்டில் சப்–இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார்.

‘‘டே இசக்கி..’’என்று மறுபடியும் கூப்பிட்டார் சப்–இன்ஸ்பெக்டர். கூப்பிட்டவுடன் அவரை நோக்கி போகாமல் நின்று கொண்ட இடத்திலிருந்தபடியே

‘‘என்ன சார்..’’ என்று தெனாவட்டா கேட்டான் இசக்கி.

‘‘டே.. போலீஸ்டேசனுக்கு கொஞ்ச நேரத்துல வரணும். ஓ கே வா.. என்று சொல்லிவிட்டு இசக்கியின் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பிச்சென்றார் சப்–இன்ஸ்பெக்டர். இதையெல்லாம் டீயை போட்டபடியே கவனித்துக்கொண்டிருந்த டீ கடை ரவி.

‘‘இசக்கி அண்ணே.. எஸ்.ஐ கிட்ட இப்படி பயம்மில்லாம பேசுற..’’ என்றான்

‘‘ஆமாடா.. ஏதாவது ஒரு வீட்டுல பூட்டு ஒடைக்காமல் திருட்டுப் போச்சுன்னா உடனே என்னயத்தான் முதல் விசாரனையாக கூப்பிட்டு விசாரிப்பாங்க ..’’

‘‘எதுக்குண்ணே..!

‘‘டே.. ரவி நான் ‘‘பூட்டு சாவி ரிப்பேர்’’ பாக்குற கடை வச்சிருக்கேன்ல அதனால என்னையத்தான்..! ஏதோ திருடன் போல சந்தேகபட்டு முதல் விசாரணையாக விசாரிப்பாங்க..! குற்றமே செய்யாம இந்த மாதிரி மாசத்துக்கு ஒன்னு ரெண்டு தடவ ஸ்டேசனுக்கு போக வேண்டியிருக்கு.. சரி.. கடைய கொஞ்சம் நேரம் பாத்துக்க நான் போயிட்டுவந்துரேன்..’’ என்று நொந்தபடியே பைக்கை எடுத்துக்கொண்டு போலீஸ்டேசனை நோக்கி புறப்பட்டான் இசக்கி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *