சிறுகதை

முதல் ஓட்டு | ராஜா செல்லமுத்து

அனுவுக்குள் அப்படியொரு சந்தோஷம். பூரிப்பு. உற்சாகம். அளவில்லாத ஈடுபாட்டில், அன்று அவளின் கால்கள் தரையில் நிற்கவில்லை. அவளோடு சேர்ந்த சில சிநேகிதிகளுக்கும் அப்படியே இருந்தது.

“தேவி”

நீயும் இப்பதான முதன்முதலாக ஓட்டு போட போற?

“ஆமா”

“நம்மோட சேர்ந்து சேர்ந்த பிரண்டுகளுக்கும் இதுதான முதல் ஓட்டு”

“ஆமா” என்று தலையாட்டினார்கள், ஒரு கல்லூரி மாணவர்கள்.

நீ யாருக்கு ஓட்டு போடுவ?

“நல்லவங்களுக்கு”

அத எப்படி கண்டுபிடிப்பு?

“எப்படியோ?”

“ஏய்…. எனக்கு நல்லவங்க கெட்டவங்க, அப்படி எல்லாம் எதுவும் கெடையாது. நான் முதன்முதலா ஓட்டு போடப் போறேன்” அவ்வளவுதான். நான் என்னைய ஒரு வாக்காளரா ஒரு மெச்சூரிட்டியான ஆளா காட்டிக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு அவ்வளவுதான். என்னையே நான் தகுதி படைத்த ஆளா நிரூபிக்க ஒரு வழியாக தான் இந்த ஓட்டு நினைக்கிறேன் என்று நித்யாவும் சொல்ல அன்றைய நாளில் முதன்முதலாய் ஓட்டுப்போடும் மொத்த பெண்களும் ஒன்றுகூடிப் பேசிக்கொண்டார்கள். கல்லூரி முடிந்து வெளியேறிய நேரம்….

” ஏய் ஓட்டர் ஐடியில என்னோட பேர் இல்லப்பா என்று கவலை தோய்ந்த முகத்தில் சொன்னாள் கவிதா

“ஏய்… நீ இன்னும் வயசுக்கு வரல போடில. அதான் உனக்கு ஓட்டு இல்ல போல” என்று இன்னொரு தோழி சீண்ட, அந்த இடத்தில் இளவட்டங்களின் இனிமைக் கூச்சல் இன்னும் கொஞ்சம் இரட்டிப்பானது.

“நானெல்லாம் ஓட்டு போட வரமாட்டேன்” என்ற சங்கீதாவை உடனே இடைமறித்தாள் சுபிதா

“ஏன்?”

“எனக்கு பிடிக்கல”

“அதான் ஏன்னு கேக்குறேன்”

“பிடிக்கலன்னா பிடிக்கல தான் அதுக்கு மேல எதுவும் என்கிட்ட கேக்காத” என்று சங்கீதாவை நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு மொய்த்தனர்.

ஏய் இது உனக்கு முதல் ஓட்டுடி இந்த நல்ல சந்தர்ப்பத்த நழுவ விடாத வந்து ஓட்டு போட்டுட்டு வா என்று கூறிய நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவர்களை லட்சியம் செய்து பேசினார்கள். அவர்கள் பேசுவது அத்தனையும் உள்வாங்கிய சங்கீதா எல்லாவற்றிற்கும் தலையை மட்டுமே ஆட்டினாளேயொழிய அவளுடைய மனதிக்குள் ஒரு போராட்டமே நடந்து கொண்டு இருந்தது. முதல் ஓட்டு 18 வயது பூர்த்தியான பூரிப்பில் புளகாங்கிதத்தில் இருந்தார்கள் இளம்பெண்கள்.

அவரவரின் வீடுகளுக்கு அகன்று போனவர்களின் எண்ண அலைகள் தேர்தல் தேதியையே புத்தியில் தேக்கி வைத்து இருந்தது.

தேர்தல் நேரம் நெருங்க நெருங்க தெருக்களில் பிரச்சாரத் தோரணங்கள் இடைவிடாமல் ஆக்கிரமித்திருந்தன.

நிறையத் தடவை வாக்களித்தவர்களில் மனநிலை இயல்பை விட இன்னும் கீழே இறங்கி இருந்தது. முதன்முதலாக ஓட்டுப்போடப் போகிறவர்களின் மனநிலை மட்டும் உற்சாகம் கொப்பளித்துக் கொப்பளித்துக் ஒரு குடமுழுக்கு விழாவை நடத்தியது.

நாட்கள் நகர நகர தோழிகளின் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. தேர்தல் நாளின் சில விடியல்களுக்கு முன் நாள் ஒரு முற்றிய இரவு சங்கீதா காணாமல் போனாள்.

சங்கீதா எங்கே போனாளாம்? உறவுகள் கேட்டு நச்சரித்தாலும் தோழிகளுக்கு முழு விவரம் தெரிந்து வாய் திறக்காமலே இருந்தனர்.

“ஏய் கவிதா…. உனக்கு தெரியாதா என்ன?

சங்கீதம் எங்க போய் விட்டா?

உண்மையைச் சொல்லு.

“எனக்கு தெரியாது”

“பொய் சொல்லாதீங்கடி. உங்களுக்கு தெரியாத என்ன? கூடவே கொஞ்சி குலாவிக்கிட்டு கெடக்கீங்க. இப்ப மட்டும் தெரியாதுன்னு கைய விரிச்சா எப்படி? என்று சங்கீதாவின் உறவுகள் கேட்ட போது பெரும்பாலான மாணவிகள் இல்லை, தெரியாதென்ற பதில் சொன்னார்கள். ஆனால் உண்மை அடிச்சுவடு அவர்களுக்கு தெரியும் என்பது உறவுகளுக்கும் தெரியும்.

“ஏய் சங்கீதா அவளும் அவளோட லவ்வர் கூட ஓடித்தான போனா?

“ஆமா”

“அவரோட லவ்வர் குரு கூட தான?

“ஆமா”

இவ்வளவு நாள் இருந்துட்டு இப்ப ஏன் போனாளாம்.

“ம்ம்” இதுநாள் வரைக்கும் அத மேஜர் இல்ல. இப்ப மேஜர் ஆயிட்டாயில்ல அதான்.

“ஓ….. அவ மேஜர் ஆயிட்டான்னு அவளுக்கு எப்படி தெரியும். அவளுக்கு தான் ஓட்டுப் போடுற வயசு வந்திருச்சே அதான் ஓடிப்போய்ட்டா

“ஓ… அப்பிடியா?”

“ஆமா” இந்த வருஷம் அவ முதன்முதலாக ஓட்டுப் போடப் போறயில்ல அந்த தைரியத்திலதான் ஓடிப்போயிட்டா, இதுக்கு முன்னாடி ஓடிப் போயிருந்தா “மைனர்” அது இதுன்னுசொல்லி போலீஸ் கேஸ் ஆகும். இப்பப்பாரு, எல்லாம் அரசாங்கமே உத்தரவாதம் குடுத்துட்டாங்க . நீ மேஜர். நீ மெச்சூரடு. நீ ஒரு 18 வயசு வாக்காளர். உன்னை நீ சரிப்படுத்த தகுதி இருக்கு. உன்னோட தலைவரை தேர்ந்தெடுக்கிற தகுதி உனக்கு இருக்கும் போது நீ ஏன் உன்னோட வாழ்க்கைய தீர்மானிக்க கூடாதுன்னு இந்த முதல் ஓட்டு முதல் அதிகாரம் .இந்தத் தகுதி தான் சங்கீதா ஓட்டு போட வச்சுருக்கு. அவ முதன்முதலா ஓட்டுப் போடுறாளோ இல்லையோ, தான் பெரிய மனுஷங்கிறது உணர்ந்திட்டா என்று சங்கீதாவின் தோழிகள் பேசிக்கொள்ள. ,

“ஏய் … ஓட்டுப் போடுறதுக்கு மட்டும் தான் 18 வயசு .பொண்ணுங்களோட கல்யாண வயசு 21  என்று ஒரு நடுத்தர பெண் சொன்னபோது எஞ்சியிருந்த இளவட்டங்களுக்கு சுருக்கென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *