சென்னை, ஏப்.7–
சட்டசபையில், முதல்வர் பதவி விலக வலியுறுத்தும் பதாகையை காட்டியதால், அவையில் இருந்து 7 அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சட்டசபையில் இன்று சபை விதிப்படி அனுமதியளிக்க முடியாத ஒரு விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச முயன்றதால், அவரையும் அவரது கட்சி உறுப்பினர்களையும் ஒரு நாள் சட்டசபையிலிருந்து வெளியேற்றி சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை எடுத்தார்.
இன்று சபைக்கு வந்திருந்த எதிர்க்கட்சி தலைவரும், அண்ணா தி.மு.க. உறுப்பினர்களும் பல்வேறு கோரிக்கைகளை அச்சிட்ட ஒரு பேட்ஜை தங்கள் சட்டையின் பாக்கெட்டில் அணிந்து வந்தனர்.
முதல்வர் பதவி விலக வலியுறுத்தி எழுதிய பதாகையை 7 அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் தூக்கிக் காட்டியபடியே நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரு நாள் இந்த அவை கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பித்து, அவைக் காவலர்கள் மூலம் அவர்களை வெளியேற்றி நடவடிக்கை எடுத்தார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் எழுந்து பேசினார். வெளியேற்றப்பட்ட அண்ணா தி.மு.க. உறுப்பினர்களை திரும்பவும் சபைக்கு அழைத்து அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள சபாநாயகர் முன்வர வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
முதல்வரின் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்டார்.
சபாநாயகர் இதுதொடர்பான உத்தரவை வெளியிட்டு பேசியதாவது:–
பாராளுமன்றத்தில் பதாகை கொண்டு வந்து காட்டிய உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து பாராளுமன்ற சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி இந்த சட்டசபையில் பதாகையை காட்டிய 7 உறுப்பினர்கள் மட்டும் இன்று ஒரு நாள் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள். மீதமுள்ள எதிர்க்கட்சி தலைவரும், அவரது அண்ணா தி.மு.க. உறுப்பினர்களும் தங்கள் சட்டையில் குத்தி வைத்துள்ள கோரிக்கை எழுதிய பேட்ஜை அகற்றி விட்டு இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
அவர் சொன்னது போல அந்த பேட்ஜை அகற்றிவிட்டு மற்ற உறுப்பினர்கள் மீண்டும் சபைக்கு வந்து நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர்.
அண்ணா தி.மு.க.விலிருந்து ஒதுங்கி இருக்கும் செங்கோட்டையன் தன் சட்டைப் பையில் கோரிக்கை எழுதிய பேட்ஜை குத்தியிருந்தார். சபாநாயகர் கேட்டுக்கொண்ட பிறகு அவரும் அந்த பேட்ஜை அகற்றி விட்டு சபை நடவடிக்கைகளில் கலந்து கொண்டார்.