வாழ்வியல்

முதலைகள் கல் விழுங்க காரணம் என்ன தெரியுமா?

நீர் நிலைகளில் அதிக நேரத்தைக் கழிக்கும் முதலைகள், அடிக்கடி கற்களையும் விழுங்குவது உண்டு. இது எதனால் என்பது, உயிரியலாளர்களுக்கு தெளிவாக தெரியாமல் இருந்தது.

சில பறவைகள், கடினமான இரைகளை செரிமானம் செய்வதற்காக, நுண் கற்களை கொத்தித் தின்பது உண்டு. அதுபோல, காட்டெருமை போன்ற கடினமான இறைச்சிகளை வேட்டையாடும் முதலைகளும், சீக்கிரம் உண்ட இரை செரிப்பதற்காக, கற்களை உண்பதாகவே உயிரியலாளர்களில் ஒரு தரப்பு கருதியது.

ஆனால், குட்டி முதலைகள் சிலவற்றை ஆய்வகத்தில் வைத்து ஆராய்ந்த விஞ்ஞானிகள், நீருக்கு அடியில் அதிக நேரம் இருப்பதற்காக, தன் எடையை கூட்டுவதற்காகத் தான் கற்களை முதலைகள் உண்பதாக கண்டறிந்துள்ளனர்.

தன் உடலின் எடையில், 2.5 சதவீதம் எடையுள்ள கற்களை விழுங்கும் முதலைகள், வழக்கத்தைவிட, 88 சதவீதம் கூடுதல் நேரம் நீருக்கடியில் வலம்வர முடிந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

‘சயின்ஸ்’ இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, குட்டி முதலைகளை வைத்து செய்யப்பட்டது. எனவே, பெரிய முதலைகளை ஆராய்ந்த பிறகே, முதலை கல் விழுங்கும் ரகசியம் உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இருந்தாலும், இந்த காரணமே பெரிய முதலைகள் கல் விழுங்குவதற்கும், காரணமாக இருக்க முடியும் என்று ஓரளவுக்கு யூகிக்க இடம் தருகிறது என்பதை மறுக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *