செய்திகள்

முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6½ லட்சம் கோடி ஒப்பந்தம்; 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

ஸ்டாலின் தகவல்

சென்னை, ஜன.9–-

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.6.64 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி யுள்ளது. இதன் மூலம் 27 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக (ரூ.83 லட்சம் கோடி) உயர்த்துவதை இலக்காக கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த 2 நாட்களாக நடந்தது.

தொடக்க விழாவின்போதே, ஹூண்டாய், கோத்ரேஜ், டாடா எலக்ட்ரானிக்ஸ், வின் பாஸ்ட் உள்ளிட்ட 12 பெரிய நிறுவனங்கள் ரூ.57,354 கோடி முதலீட்டை மேற்கொள்ளும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.

முதல் நாளிலேயே மாநாட்டின் இலக்கான ரூ.5½ லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்து விட்டதாக, தொழில் துறை செயலாளர் அருண் ராய் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதனால், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தொழில் முதலீடு ரூ.6 லட்சம் கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் 2-வது மற்றும் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. காலை 10 மணி முதல் 8 கருத்தரங்க அரங்கங்களில் 18 தலைப்புகளின் கீழ் கருத்தரங்கங்களும், தொழில் கண்காட்சியும் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு நிறைவு விழா நடைபெற்றது.

விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து, பல்வேறு நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது -தனியார் கூட்டாண்மைக் கொள்கையை வெளியிட்டார்.

தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு துறை சார்ந்த தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு தமிழக அரசுடன் பறிமாறிக்கொண்டன. தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திராவிட மாடல் அரசின் இந்த உலக மூதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக, தமிழ்நாட்டின் 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த மாநாட்டை உலகமே வியக்கும் வகையில் நடத்தி – இந்தியாவே வியக்கும் வகையில் முதலீட்டை ஈர்த்து – என் இதயத்தில் நீங்காத இடத்தை பெற்று விட்டார் டி.ஆர்.பி.ராஜா. தொழில்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட குறுகிய காலத்திலேயே இமாலய சாதனையை செய்திருக்கும் அவரை பாராட்டுகிறேன்.

நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்ற பெயரில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலமாக, ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 803 கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2 லட்சத்து 80 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தபட்டது.

நான் ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துகிற வகையில், ரூ.7 ஆயிரத்து 441 கோடி மதிப்பிலான முதலீடுகளை பெற்றோம். அதோடு, நான் தொடர்ந்து இந்த முதலீடுகள் செயல்வடிவம் பெறுவதை கண்காணிப்பேன்.

தொழிற்சாலைகளுக்கு அடிக்கல்

அந்த வகையில், ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். 27 தொழிற்சாலைகளை திறந்து வைத்திருக்கிறேன். இது மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையோடு சொல்கிறேன், இந்த மாநாடு தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமையும். தமிழ்நாட்டின் வரலாற்றில் நிச்சயம் இது நினைவுகூரப்படும். இந்த மாநாட்டினுடைய தனித்துவமும், புதுமைத்துவமும் என்றென்றும் பேசப்படும்.

ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு

நான் அதிகாரிகளுக்கு ஆரம்பத்திலே யே ஒரு அன்புக்கட்டளை இட்டேன். உலக அளவில் முதலீட்டுக்கான சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும். இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதற்கான முக்கிய காரணமாக அதுதான் இருக்க வேண்டும் என்று தெரிவித்தேன்.

எங்களுடைய அயராத உழைப்பு மற்றும் உங்களுடைய பங்களிப்பு காரணமாக, இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவாக, ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி என்பதை, இந்தியாவே உற்றுநோக்கும் இந்த அவையில் பெரும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். இந்த முதலீடுகள் மூலம், நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க ஊக்குவிப்பு நிறுவனமான ‘ஸ்டார்ட்அப்’ தமிழ்நாடு உருவாக்கியுள்ள ‘டேன்-பண்ட்’ மூலம் பன்னாட்டுத் துணிகர முதலீட்டு நிறுவனங்களை தமிழ்நாட்டின் புத்தொழில் நிறுவனங்களோடு இணைப்பதற்கான தளம், இன்றைக்கு தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

உறுதுணையாக இருப்போம்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் பங்குதாரர் நாடுகள் இந்த மாநாடு வெற்றிகரமாக அமைய தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்களுடைய அரசை பொறுத்த வரைக்கும், நீங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து போடுவதில் இருந்து உங்களுடைய எல்லா செயல்களுக்கும் – அதாவது நீங்கள் உங்கள் தொழிற்சாலையை முழுமையாக கட்டி முடித்து, உற்பத்தியை தொடங்குவதில் இருந்து, அதற்கு பிறகும்கூட, உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். உங்களுக்கு தேவையான எல்லா ஒப்புதல்களும் ஒற்றை சாளர முறை மூலமாக, விரைந்து வழங்கப்படும் என்று நான் உறுதி கூற விரும்புகிறேன்.

அமைச்சர் தலைமையில்

ஒப்பந்தங்கள் கண்காணிப்பு

அதேபோல இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த, தொழில்துறை அமைச்சர் தலைமையில் ஒரு சிறப்புக்குழு அமைக்கப்படும். அதில் தொழில்துறை அலுவலர்கள், தொழில் வழிகாட்டி அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்பார்கள். ஒவ்வொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் தொடர்ந்து கண்காணித்து, அதை ஒரு முழுமையான தொழிற்சாலையாக மாற்றுவதற்கு, அவர்கள் எல்லா முயற்சிகளையும் எடுப்பார்கள்.

உங்களுக்கு எந்த தருணத்திலும், என்னிடம் ஏதாவது தகவல் தெரிவிக்க வேண்டும் என்றால், என்னோட அலுவலகத்தை, நீங்கள் எப்போது வேண்டும் என்றாலும் தொடர்பு கொள்ளலாம். இந்த உறுதிமொழியை நான் தொழிற்துறை அமைச்சர் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலையில் வழங்குகிறேன். அதனால் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம்.

உங்கள் எல்லோரையும் நான் தொழில்முனைவோரா மட்டுமில்ல தமிழ்நாட்டின் நல்லெண்ணத் தூதுவர்களாக பார்க்கிறேன். எனவே, தமிழ்நாட்டை உலகுக்கு அறிமுகம் செய்யுங்கள். உலக நாடுகளை தமிழ்நாட்டுக்கு அழைத்து வாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், இங்கிலாந்து நாட்டு இணை அமைச்சர் லார்டு தாரிக் அகமது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் பிற துறை அமைச்சர்கள், எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தொழில் துறை செயலாளர் அருண் ராய், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அர்ச்சனா பட்நாயக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிறைவாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட தொழிலதிபர்கள், துறை வாரியாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துறை அமைச்சர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *