சென்னை, ஜன. 2–
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் நேற்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இல்லத்தில், டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன், முதலமைச்சரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சித்துறையில் முன்னேற்ற, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் விரைவில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சூழலில், நாட்டின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டாடா குழுமத்தின் தலைவர், முதலமைச்சரை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஸ்டாலின், ‘என்.சந்திரசேகரன் என்னை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருக்கு விருந்தோமல் செய்வது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அதில் குறிப்பிள்ளார். டாடா குழுமத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சரை சந்திப்பது இது முதல் முறையல்ல, ஏற்கெனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மு.க. ஸ்டாலினை, நடராஜன் சந்திரசேகரன் சந்தித்துப் பேசினார்.
உலகெங்கிலும் வேலையிழப்பு அபாயம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், டாடா நிறுவனத்தில் பணிக்கு ஆட்கள் சேர்ப்பு மும்முரமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.