செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒலிம்பிக் வாளை பரிசாகக் கொடுத்த பவானி தேவி

சென்னை, ஆக. 4–

ஒலிம்பிக்கில் வாள்வீச்சுப் போட்டியில் கலந்து கொண்ட பவானி தேவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, ஒலிம்பிக் வாளை அவருக்கு பரிசாக கொடுத்தார்.

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்துவரும் நிலையில், இந்தியா சார்பில் 100-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இதில், இந்தியா சார்பில் வாள்வீச்சுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி பங்கேற்றார். இரண்டாவது சுற்று வரை முன்னேறிய அவர், பிரான்ஸ் வீராங்கனையிடம் 7-15 என்ற புள்ளிகளில் தோல்வியைத் தழுவினார்.

இதையடுத்து, சென்னை திரும்பிய அவர், இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோரைத் தன் தாயாருடன் சந்தித்தார். இதன்பின், பவானிதேவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

முதலமைச்சர் பாராட்டு

“ஒலிம்பிக்கில் நான் விளையாடியதை முதலமைச்சர் பார்த்துள்ளார். மிகவும் நன்றாக விளையாடியதாக மிகவும் பாராட்டினார். போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பும் எங்களுடன் இருமுறை கலந்துரையாடி வாழ்த்து தெரிவித்தார். எங்களுக்குத் தேவையானதைச் செய்வோம் என்றும் கூறினார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக வாள்வீச்சுப் போட்டியில் நான் கலந்து கொண்டேன். தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கக்கூடியதாக இது அமைந்துள்ளது. இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என் குடும்பத்தினர் மிகவும் உறுதுணையாக இருந்தனர்.

இந்நிலையில் முதல்வருக்கு என்னுடைய ஒலிம்பிக் வாளை நான் பரிசாகக் கொடுத்தேன். ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக வாள்வீச்சில் முதல் முறையாகப் பயன்படுத்திய வாள் என்பதால், அதனைப் பரிசாகக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன்.

ஆனால், அடுத்த ஒலிம்பிக்கில் நன்றாக விளையாட வேண்டும், அதற்கு இந்த வாள் உனக்கு தேவை எனக்கூறி, முதலமைச்சர் எனக்கே அதைத் திருப்பிப் பரிசாகக் கொடுத்தார். என்ன உதவியானாலும் செய்யத் தயார். அடுத்த ஒலிம்பிக்கில் நன்றாக விளையாட வேண்டும் எனக் கூறினார். இவ்வாறு பவானி தேவி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *